×

ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரம் நேரில் பார்த்த பொதுமக்கள் உறவினர்கள் சாட்சியம் அளிக்கலாம்

சென்னை: அயனாவரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய ரவுடி சங்கரை கடந்த மாதம் 21ம் தேதி அயனாவரம் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது ரவுடி சங்கர் போலீசாரை அரிவாளால் தாக்கி தப்ப முயன்றபோது இன்ஸ்பெக்டர் நட்ராஜ் தற்பாதுகாப்புக்காக 3 ரவுண்டு தனது துப்பாக்கியால் ரவுடி சங்கரை சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு முழு விசாரணை நடத்த மாநகர காவல் துறையில் இருந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்கான விசாரணையும் தொடங்க உள்ள நிலையில் ரவுடி சங்கரின் தாய் தனது மகன் என்கவுன்டரில் மர்மம் உள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், ரவுடி என்கவுன்டர் குறித்து முழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எழும்பூர் ஐந்தாவது பெருநகர குற்றவியல் நடுவருக்கு உத்தரவிட்டது. அதைதொடர்ந்து, எழும்பூர் பெருநகர குற்றவியல் மாஜிஸ்திரேட் சிவசக்திவேல் கண்ணன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கர் இறந்தது தொடர்பாக நேரில் பார்த்த நபர்களே, சங்கரின் இறப்பு தொடர்பான விவரங்கள் தெரிந்த சங்கரின் உறவினர்களோ, பொதுமக்களோ சாட்சியம் அளிக்க விரும்பினால் இன்று, நாளை 5 மற்றும் 7ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை எழும்பூரில் உள்ள பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகி சங்கர் இறப்பு மற்றும் அதுதொடர்பான விவரங்களை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. நேற்று மாலை சிபிசிஐடி உதவி கமிஷனர் கண்ணன் மற்றும் 5 பேர் அடங்கிய குழுவினர் சங்கரை என்கவுன்டர் செய்த இடத்தை ஆய்வு செய்தனர்.

Tags : public ,Relatives ,encounter ,Rowdy Shankar , Rowdy Shankar, Encounter affair, eyewitness public, relatives, testimony
× RELATED வாலிபர் இறப்பில் சந்தேகம் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்