×

பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படவில்லை. ஆனாலும், தமிழ்நாட்டில் அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் மறைமுகமாக இட ஒதுக்கீடு வழங்கும் முறை 2003ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப் பட்டு வந்தது. ஆனால், அந்த நடைமுறை செல்லாது என்று கடந்த 2015ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதை 2016ம் ஆண்டில் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தில், கடந்த 2016ம் ஆண்டில் சில திருத்தங்களை செய்த தமிழக அரசு, 1(2), 40, 70 ஆகிய பிரிவுகளை சேர்த்தது.

இந்த பிரிவுகளின் படி தமிழக அரசுப் பணியாளர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அந்த சட்டத் திருத்தமும் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தன. அதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இதனால், தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் 2 லட்சத்திற்கும் கூடுதலான பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அதிகாரிகள் பாதிக்கப்படுவர். இத் தீர்ப்புகள் சட்டத்தின் அடிப்படையில் வேண்டுமானால் சரியானவையாக இருக்கலாம்.

ஆனால், தார்மீக நெறிமுறைகளின் அடிப்படையிலும், சமூகநீதியின்படியும் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதன் மூலம் பதவி உயர்வில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க முடியும். எனவே, அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசும், மத்திய அரசும் மேற்கொள்ள வேண்டும். அதன்மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய, மாநில அரசுத் துறைகளின் பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* பப்ஜி தடைக்கு வரவேற்பு
பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் வெளியிட்ட செய்தி: இந்தியாவில் பப்ஜி எனப்படும் இணைய விளையாட்டு செயலி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. கல்வியை சிதைத்து வன்முறையை வளர்க்கும் இந்த செயலி தடை செய்யப்பட்டிருப்பதன் மூலம் மாணவர்கள் மன அழுத்தத்திலிருந்து மீட்கப் படுவார்கள். இதுவரை அந்த விளையாட்டுக்கு அடிமையாகிருந்த மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.


Tags : Ramdas ,Ramadas , In promotion, reservation for the backward, amendment of the Constitution Act, Ramadas
× RELATED பணி நியமனம், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்: UGC