×

பெரியபாளையம் அருகே திடீர் மழையால் 3 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்: தானிய கிடங்கை திறக்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே திடீர் மழையால் சுமார் 3 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்ததால், மூடிக்கிடக்கும் தானிய சேமிப்பு கிடங்கை திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அடுத்த புலியூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள புலியூர் கண்டிகை, கசுவா, பாக்கம், நத்தம்பேடு  உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் சுமார் 1000 ஏக்கருக்கு மேல்  நெல் பயிரிட்டு அவற்றை அறுவடை செய்து புலியூர் பகுதியில் உள்ள வேளாண்மை விற்பனை வணிக வரித்துறை மூலம் கட்டப்பட்டுள்ள தானிய சேமிப்பு கிடங்கில் வைப்பார்கள். பின்னர், அந்த நெல் மூட்டைகளை விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்து கொள்ளும்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தானிய சேமிப்பு கிடங்கு மூடப்பட்டது. இதனால், தற்போது விவசாயிகள் அறுவடை செய்த சுமார் 3 ஆயிரம் நெல் மூட்டைகளை புலியூர் தானிய சேமிப்பு கிடங்கு முன்பு நெல் களத்தில் கொட்டி வைத்தனர். இந்நிலையில், நேற்றும், நேற்று முன்தினமும் திடீரென அப்பகுதியில் பெய்த மழையால் இந்த நெல் நனைந்து விட்டது. அவ்வாறு நனைந்த நெல்லை விவசாயிகள் வெயிலில் உலர்த்தி வருகிறார்கள். எனவே, நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க புலியூர் தானிய சேமிப்பு கிடங்கை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை சேமித்து வைத்து பின்னர் அரசுக்கே விற்பனை செய்வதற்காக புலியூர் பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு தானிய சேமிப்பு கிடங்கு திறக்கப்பட்டது. இந்த கிடங்கில் நாங்கள் அறுவடை செய்த நெல்லை சேமித்து வைத்து அரசாங்கத்திற்கு விற்பனை செய்வோம். கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் இந்த கிடங்கு மூடப்பட்டது. அதன்பிறகு மே மாதம் ஒருமுறை திறந்து மூடிவிட்டனர். இதனால், தற்போது நாங்கள் அறுவடை செய்த நெல்லை கிடங்கின் வெளியே கொட்டி வைத்துள்ளோம். இந்த நெல் தற்போது பெய்த மழையில் நனைந்து விட்டது.  

இதை பயன்படுத்தி தனியார் சிலர் 1 மூட்டை நெல் ரூ.700 முதல் ரூ.800 வரை கேட்கிறார்கள். அந்த விலைக்கு நாங்கள் நெல்லை விற்றால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும், ஆனால், இந்த நெல்லை அரசாங்கம் கொள்முதல் செய்து கொண்டால்  ரூ.1,400 வரை கிடைக்கும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் இங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காதர்வேடு பகுதிக்கு நெல்லை எடுத்து வாருங்கள்’ என்கிறார்கள். ஆனால், எங்களால் அவ்வளவு தூரம் எடுத்துச்செல்ல முடியாது. எனவே, விரைவில் புலியூர் தானிய சேமிப்பு கிடங்கை திறக்க வேண்டும் என்று கூறினர்.

Tags : rains ,grain warehouse ,Periyapalayam , Periyapalayam, sudden rain, 3 thousand, damage to paddy bundles, grain warehouse, insistence to open
× RELATED வெள்ளத்தில் மூழ்கிய துபாய்…75...