×

5 நாட்களில் கிடைத்த ரூ.3,076 கோடி எங்கே? பிஎம் கேர் நிதி பற்றி ப.சிதம்பரம் கேள்வி

புதுடெல்லி: பிஎம் கேர் நிதி திட்டத்துக்கு 5 நாட்களில் ரூ.3,076 கோடி நன்கொடை கொடுத்தவர்கள் யார்? இது, யாருக்காக செலவிடப்பட்டது என்ற விவரங்களை வெளியிட வேண்டும்,’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவிய நிலையில், சிறப்பு நிதி திரட்டலுக்காக பிஎம் கேர் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இதில், பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து நிலவி வருகின்றன. நிதி நடவடிக்கைகள் வெளிப்படையாக இல்லையென்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அறக்கட்டளையின் சார்பாக பிஎம் கேர் செயல்படுவதால், இதற்கு கிடைத்த நிதியை பேரிடர் மேலாண்மை நிதிக்கு மாற்றுமாறு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இதுபோன்ற தொடர் சர்ச்சைகள் காரணமாக சமீபத்தில் இது குறித்த தணிக்கை அறிக்கையினை பிஎம் கேர் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ப.சிதம்பரம் சில கேள்விகளை தனது டிவிட்டரில் எழுப்பியுள்ளார். அதில் அவர், ‘பிஎம் கேர் நிதி திட்டமானது கடந்த மார்ச் 27ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், மார்ச் 31ம் தேதிக்குள் ரூ.3,076 கோடி நன்கொடை வந்திருப்பதாக தணிக்கை அறிக்கை கூறுகிறது. 5 நாட்களில் ரூ.3,076 கோடியினைக் கொடுத்த நன்கொடையாளர்கள் யார் என்பதை தெரிவிக்க வேண்டும். மேலும், இந்த நிதியால் பயன் பெற்ற பொதுமக்களின் பெயர் விவரங்களையும் வெளியிட வேண்டும். நன்கொடையாளர்களின் விவரங்கள், பயனாளர்களின் விவரங்களை பொதுவில் அறிவிக்க வேண்டிய கடமை எல்லா அறக்கட்டளைகளுக்கும் உண்டு. இதை அறிவிப்பதில் பிஎம் கேர் அறக்கட்டளை நிர்வாகம் ஏன் அச்சம் கொள்ள வேண்டும்?,’ என கூறியுள்ளார்.

Tags : BM Care ,P. Chidambaram , In 5 days, where is Rs 3,076 crore? , BM Care Finance, P. Chidambaram Question
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...