×

குவைத், கத்தாரில் இருந்து சென்னை வரவேண்டிய 2 மீட்பு விமானங்கள் ரத்து

சென்னை: குவைத், கத்தார் நாடுகளிலிருந்து சென்னை வரவேண்டிய 2 சிறப்பு மீட்பு விமானங்கள் நேற்று முன்தினம் இரவு ரத்து செய்யப்பட்டன. அமெரிக்காவின் சிகாகோ, ஓமனின் மஸ்கட் நகரிலிருந்து 2 சிறப்பு விமானங்கள் மட்டுமே சென்னை வந்தன. அமெரிக்கா, கத்தார், ஓமன், குவைத் ஆகிய நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு 4 சிறப்பு மீட்பு விமானங்கள் நேற்று முன்தினம் மாலையிலிருந்து நள்ளிரவு வரை சென்னை சர்வதேச விமான நிலையம் வருவதாக இருந்தது. அதேபோல், சிகாகோ நகரிலிருந்து டெல்லி வழியாக 43 இந்தியர்கள், மஸ்கட்டிலிருந்து 176 இந்தியர்கள் என மொத்தம் 219 இந்தியர்களுடன் 2 சிறப்பு மீட்பு விமானங்கள் சென்னை வந்தன.

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் மருத்துவ சான்றிதழ்களுடன் வந்ததால் அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் சிறப்பு கவுன்டரில் இ-பாஸ் பெற்றுக்கொண்டு வீடுகளில் 14 நாட்கள் தனிமைக்கு புறப்பட்டுச் சென்றனர். மருத்துவ சான்றிதழ்களுடன் வராதவர்களுக்கு மட்டும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, அவர்களும் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்த அனுப்பப்பட்டனர். ஆனால் குவைத், கத்தாரிலிருந்து சென்னை வரவேண்டிய 2 மீட்பு விமானங்கள் நேற்று வராமல் ரத்து செய்யப்பட்டன. அதற்கு என்ன காரணம் என்று உறுதியாக தெரியவில்லை. தற்போது, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் பயணிகள் மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களுடன் வந்தால் மட்டுமே விமானங்களில் பயணம் செய்ய அனுமதிக்கின்றனர். எனவே இந்த விமானங்களில் வரவேண்டிய இந்தியர்கள் பலர் அந்த சான்றிதழ்கள் வாங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால், போதிய பயணிகள் இல்லாமல் இந்த 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : rescue flights ,Kuwait ,Chennai ,Qatar , Kuwait, Qatar, Chennai, 2 rescue flights, canceled
× RELATED குவைத்தில் சிக்கித் தவிக்கும்...