×

யாருடனும் இணைந்து செயல்பட விரும்பவில்லை தடுப்பூசி விஷயத்தில் தனிவழி: அமெரிக்கா தடாலடி அறிவிப்பு

வாஷிங்டன்: ‘தடுப்பூசி உற்பத்தி, விநியோகத்தில் உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட விரும்பவில்லை,’ என்று அமெரிக்கா தடாலடியாக அறிவித்துள்ளது. உலகெங்கும் இரண்டரை கோடிக்கும் மேலானோரைப் பாதித்துள்ள கொரோனா வைரசால், 8 லட்சத்துக்கும் மேல் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதனால், வைரசை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன. தடுப்பூசி கண்டுபிடிப்பது, அதற்கு உலக சுகாதார அமைப்பின்அனுமதியை பெறுவது, சர்வதேச அளவில் ஒருங்கிணைந்து விநியோகம் செய்வது என்று கூட்டுத் திட்டமிடலாக இந்த முயற்சி நடந்து வருகிறது.

கோவாக்ஸ் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த கூட்டு முயற்சியில் அமெரிக்கா சேர விரும்பவில்லை என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜூட் டேர் கூறியுள்ளார். ‘உலக சுகாதார நிறுவனத்தின் நடவடிக்கைகளில் கொண்டுள்ள சந்தேகம் காரணமாக அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவின் நட்பு நாடுகளுடன் இணைந்து தடுப்பூசி முயற்சியில் ஈடுபடுவோம்,’ என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அ்மைப்பு  செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை அமெரிக்கா ஏற்கனவே முன்வைத்திருந்தது. இதன் எதிரொலியாகவே டிரம்ப் நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று வாஷிங்டன் போஸ்ட் கருத்து தெரிவித்துள்ளது.

* தடுப்பூசியின் தரத்தைத் தீர்மானிக்க அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு போதுமானது. உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி தேவையில்லை என்பதே டிரம்ப் நிர்வாகத்தின் முடிவு.
* அமெரிக்காவின் இந்த தடுப்பூசி முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வருகிறது.
* அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் தயாரித்திருக்கும் கொரோனா தடுப்பூசியானது அமெரிக்காவில் தற்போது 3வது கட்ட பரிசோதனையில் உள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குக் கொடுக்கப்பட்டு ஆய்வுகள் நடந்து வருகின்றன.


Tags : United States ,anyone , Together, do not want, vaccine matter, freeway, USA tadalafil
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்