×

உச்ச நீதிமன்றம் உத்தரவு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க முடியாது: தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி

புதுடெல்லி: அரசுப் பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பணி நியமனங்களுக்கு 69 சதவீதம் இடஒதுக்கீடு என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2003ம் ஆண்டு முதல் அரசு பணியில் உள்ளவர்களுக்கு பணிமூப்பு மற்றும் பதவி உயர்வுக்கும் சுழற்சி முறையில் இடஒதுக்கீடு முறை செயல்படுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து முதலாவதாக தமிழக அரசின் இந்த நடைமுறையை எதிர்த்து தொடரபட்ட வழக்கில், சுழற்சி முறையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், 2016ம் ஆண்டு தமிழக அரசு பணி மூப்பு, பதவி உயர்வுக்கான இடஒதுக்கீட்டை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சட்ட விதியில் திருத்தங்கள் கொண்டு வந்தது. இந்த சட்டவிதிகளை எதிர்த்து அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த 60க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம்,” அரசு ஊழியர்கள் சட்ட விதிகளில் மாநில அரசு திருத்தம் செய்துள்ளது என்பது அந்த விதிகளுக்கு புறம்பாக பின்பற்றப்பட்ட நடைமுறையாகும். இதனை ஏற்க முடியாது. குறிப்பாக இந்த நடைமுறையால் மறைமுகமாக 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அதிகமாக இடஒதுக்கீடு வழங்கியதாக கருதப்படும் என தெரிவித்த நீதிமன்றம், அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் தகுதி அடிப்படையில் மீண்டும் பணி மூப்பு பட்டியலை 12 வாரங்களுக்குள் புதிதாக தயாரிக்க கடந்த ஆண்டு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடைக்கோரி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நடந்த விசாரனையில், உயர்நீதிமன்ற மேற்கண்ட உத்தரவால் சுமார் 2 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் அதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை கடந்த ஜூலை 6ம் தேதி தள்ளுபடி செய்ததோடு, பணி மூப்பின் அடிப்படையில் எட்டு வாரத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில், மேற்கண்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு மற்றும் டி.என்.பி.எஸ்.சி ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட சீராய்வு மனுவானது உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து உத்தரவில்,”அரசு பணியில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரிய வழக்கில் தீர ஆராய்ந்த பின்னர் தான் நீதிமன்றம் ஒரு இறுதி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதனால் முன்னதாக வழங்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு மேற்கொள்ள வேண்டிய அவசியம் மற்றும் முகாந்திரம் இல்லை என்பதால் இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் சீராய்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. இதில் எட்டு வாரத்தில் பணி மூப்பில் அடிப்படையில் பதவி உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னதாக வழங்கப்பட்ட உத்தரவை செய்யத் தவறிய மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டி.என்.பி.எஸ்.சிக்கு எதிராக நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு எதிர்மனுதாரர் இருவரும் 6 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புகிறது என தெரிவித்த நீதிபதி, தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டனர்.

Tags : State ,Tamil Nadu ,Supreme Court , Supreme Court, on promotion, reservation, Government of Tamil Nadu, revision petition, dismissal
× RELATED மதுபாட்டில்களை கடத்திய வழக்கில் காரை...