×

மாவட்டங்களுக்கு இடையே 7ம் தேதி முதல் பஸ், ரயில் இயக்க அனுமதி: ஆம்னி பஸ்களும் ஓடும்; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே வரும் 7ம் தேதி முதல் அரசு மற்றும் ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் ரயில் சேவைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வருகிற 30ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு அவ்வப்போது பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதன் ஒருகட்டமாக கடந்த 1ம் தேதி முதல் மாவட்டத்திற்குள் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அதேபோன்று வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி, பூங்காக்கள், மால்கள், நூலகங்கள், பயணிகள் தங்கும் ஓட்டல்களுக்கு அனுமதி என பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தமிழகத்திற்குள் இ-பாஸ் எடுக்காமல் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், தமிழகத்தில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு முழு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. இந்நிலையில், வருகிற 7ம் தேதி (திங்கள்) முதல் மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் அனைத்து அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் உள்ளிட்டவைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், தமிழகத்திற்குள் ரயில் சேவையும் தொடங்கும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 25.3.20 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளித்துள்ளது. இந்த வகையில், தற்போது தமிழ்நாட்டில், மாவட்டத்திற்குள்ளான பொது பேருந்து போக்குவரத்து, அனைத்து வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனம், வணிக வளாகங்கள், தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இந்த ஊரடங்கு உத்தரவானது ஒரு சில கட்டுப்பாடுகளுடன் 30.9.20 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கிய பணி மற்றும் வியாபார நிமித்தமாக சென்று வர பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி வருகிற 7ம் தேதி (திங்கள்) முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், அனுமதிக்கப்பட்ட தடங்களில் மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்திற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, வருகிற 7ம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணிகள் ரயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது, வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவது, வெளியிடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிப்பது உள்ளிட்ட அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றினால், கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க முடியும். எனவே பொதுமக்கள் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* கடந்த 1ம் தேதி முதல் மாவட்டத்திற்குள் பஸ் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
* வரும் 7ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் ஆம்னி பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
* மாநிலத்திற்குள் பயணிகள் ரயில் சேவையும் அனுமதிக்கப்படுகிறது.

* செப். 7ல் ஆம்னி பஸ்கள் இயங்காது: உரிமையாளர்கள் அறிவிப்பு
சென்னை: வரும் 7ம் தேதி ஆம்னி பஸ்கள் இயங்காது என அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் பொதுபோக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆம்னி பஸ்கள் இயங்கவில்லை. பிறகு மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அரசு பஸ்கள் நேற்று முன்தினம் முதல் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், பொதுமக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கிய பணி மற்றும் வியாபார நிமித்தமாக சென்று வர பொதுமக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.  

பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, 7.9.2020 முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 7ம் தேதி ஆம்னி பஸ்களின் சேவை துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் உரிமையாளர்கள் இயங்காது என அறிவித்துள்ளனர். இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியதாவது: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில், ஏற்கனவே பஸ்கள் நிறுத்தியிருந்த காலத்திற்கு சாலை வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சமூக இடைவெளியுடன் பேருந்துகளை இயக்கினால் வருவாய் இழப்பு ஏற்படும். இதனால் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வரும் 7ம் தேதி ஆம்னி பேருந்துகள் இயங்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags : districts ,Omni ,Government of Tamil Nadu , Between districts, from the 7th, bus, train permit, omni bus, running; Government of Tamil Nadu
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை