×

பிஎம் கேர்ஸ் நிதிக்கு 5 நாட்களில் ரூ.3,076 கோடி நிதியளித்த பெருந்தன்மையான நன்கொடையாளர்கள் பெயரை இன்னும் ஏன் வெளியிடவில்லை? ப.சிதம்பரம் கேள்வி

சென்னை:பிஎம் கேர்ஸ் நிதிக்கு  5 நாட்களில் ரூ.3,076 கோடி நிதியளித்த பெருந்தன்மையான நன்கொடையாளர்கள் பெயரை இன்னும் ஏன் வெளியிடவில்லை? என ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு நிதி திரட்டும் வகையில் பி.எம் கேர்ஸ் தொடங்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பவர்கள் அதில் பங்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே, பேரிடர் நிவாரணங்களுக்குகென்று பிரதமர் நிவாரண நிதி என்ற அமைப்பு இருக்கும்போது புதிதாக பி.எம் கேர்ஸ் எதற்கு என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்தன. மேலும், பி.எம் கேர்ஸில் வெளிப்படைத் தன்மை இல்லை. பி.எம் கேர்ஸில் எவ்வளவு பணம் வந்துள்ளது என்று கேள்வி எழுப்பிவந்தன. பி.எம் கேர்ஸின் நிதியை பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில், பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை குறித்த தணிக்கை அறிக்கை, பிஎம் கேர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை உருவாக்கப்பட்ட மார்ச் 27ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் ரூ.3,076 கோடி பணம் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது. இதில் ரூ,3,075.85 கோடி உள்நாட்டிலிருந்தும், ரூ.39.67 லட்சம் வெளிநாட்டிலிருந்தும் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், யாரெல்லாம் இந்த 5 நாட்களில் நன்கொடை அளித்தார்கள், அந்த வெளிநாட்டு, உள்நாட்டு நன்கொடையாளர்கள் பெயர் என்ன என்பது குறித்த விவரங்கள் இல்லை. இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், பிஎம் கேர்ஸ் நிதி தொடங்கப்பட்டதிலிருந்து 2020, மார்ச் 27 முதல் 31ம் தேதிவரை 5 நாட்களில் ரூ.3,076 கோடி நிதி வந்துள்ளது என பிஎம் கேர்ஸ் தணிக்கையாளர்கள் உறுதி செய்துள்ளார்கள்.

ஆனால், அந்தப் பெருந்தன்மையான நன்கொடையாளர்கள் பெயரை இன்னும் ஏன் வெளியிடவில்லை. அதற்கான காரணம் என்ன? ஒவ்வொரு தொண்டு நிறுவனமும் அல்லது அறக்கட்டளையும் தாங்கள் பெற்ற குறிப்பிட்ட அளவு நன்கொடை குறித்த விவரத்தையும், நன்கொடை அளித்தவர்கள் பெயரையும் வெளியிடக் கடமை இருக்கிறது. இந்தக் கடமையிலிருந்து பிஎம் கேர்ஸ் நிதிக்குக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்த நன்கொடையாளர்கள் நன்கு அறியப்பட்டவர்கள் தான். அறக்கட்டளையாளர்களுக்கும் நன்கொடையாளர்களை நன்கு தெரியும். பின் எதற்காக அறக்கட்டளை நிர்வாகிகள், நன்கொடை அளித்தவர்கள் பெயரை வெளியிட அச்சப்படுகிறார்கள்?, என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : donors , BM Cars Fund, Donors, P. Chidambaram
× RELATED உறுப்புதானம் செய்தவர்களின்...