×

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவ வீரர் வீரமரணம்

ரஜோரி: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானுடன் நடந்த சண்டையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லையில் தாக்குதல்கள் நடைபெறாத வகையில் போர்நிறுத்த ஒப்பந்த விதிகள் அமலில் உள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனாவால் இரு நாடுகளும் பாதிக்கப்பட்ட சூழலிலும், பாகிஸ்தான் ராணுவ தரப்பில் இருந்து அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. இந்திய நிலைகளை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்களில் இந்திய வீரர்கள் தவிர்த்து, குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட பொதுமக்களும் பலியாகி வருகின்றனர். இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்து வருகிறது. இதற்கு இந்திய தரப்பில் இருந்தும் பதிலடி தரப்பட்டு வருகிறது. ஆனாலும், பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் கெரி பகுதியில் அத்துமீறி எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்திற்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. மறைந்திருந்து வெகு நேரம் நடத்தப்பட்ட தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய வீரர்கள் விரட்டி அடித்தனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். அவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்த ஜே.சி.ஓ, ராஜ்விந்தர் சிங் என தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், அதே பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கு குழி இருப்பதாகவும், பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் இந்திய ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட புட்காம் காவல்துறை மற்றும் இந்திய ராணுவத்தினர் பயங்கரவாதிகள் 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ள இடங்கள் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : troops ,soldier ,Jammu ,Pakistani ,district ,Rajouri ,Indian ,Kashmir ,attack , Jammu and Kashmir, Rajouri, Pakistan Army, Invasion, Indian soldier killed
× RELATED போடியில் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு