×

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே யானை வழித்தடத்தை அழித்து சாலை விரிவாக்க பணி

குன்னூர்: குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே சாலை அருகே யானைகளின் வழித்தடத்தை அழித்து சாலை விரிவாக்கம் செய்யும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.யானைகளுக்கு காடுகள் நல்ல வாழ்விடமாக இருந்தால், அந்தக் காடும் ஆரோக்கியமானதாக காணப்படும்.
காட்டின் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விதைகளை பரப்புவதில் யானைகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால் மரம், செடி, கொடிகள் நன்கு வளர்ந்து சோலைக் காடுகள் உருவாகக் காரணமாக அமைகிறது. சோலைக்காடுகள் அதிகம் உள்ள நீலகிரி உயிர்சூழல் மண்டலத்தில் யானைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.  ஆனால் அண்மை காலமாக நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடம் அழிக்கப்பட்டதால், சாலைகள், குடியிருப்புகளை நோக்கி யானைகள் படையெடுக்கிறது.இதே போன்று மேட்டுபாளையம்- குன்னூர் வனப்பகுதிகள் அருகே யானை வழித்தடம் மறிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை மற்றும்  குடியிருப்புகள் உள்ள பகுதிகளுக்கும் வரும் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஈச்சமரம் பகுதியில் தண்ணீர் தேவைக்காக யானைகள் சாலையை கடந்து செல்வது வழக்கம். அந்த பகுதியில் யானைகள் சாலையை கடக்கும் பகுதி என்று வனத்துறையினரின் எச்சரிக்கை பதாகை வைத்துள்ளனர். ஆனால் தற்போது நெடுஞ்சாலை துறையினர் அவற்றை பொருட்படுத்தாமல் சாலை விரிவாக்க பணி என்று கூறி அதன் வழித்தடத்தினை ஜேசிபி உதவியுடன் அழித்து வருகின்றனர். ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறையினரிடம், ‘இப்பகுதியில் யானைகள் கடந்து செல்வது வழக்கம், எனவே யானை வழிதடத்தை அழிக்க கூடாது’, என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இதை கண்டு கொள்ளாத அதிகாரிகள் யானை வழியினை அழித்து சாலை விரிவாக்க பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

 இது குறித்து வன உயிர் ஆர்வலர்கள் கூறுகையில், ‘யானைகளின் வாழ்விடங்களை அழித்து மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். அதன் வழித்தடத்தில் குடியிருந்து கொண்டு யானைகளை குற்றம் சாட்டியும் வருகின்றனர். பட்டாசு, நெருப்பு, போன்றவற்றின் உதவியுடன் அவற்றை  விரட்டி  வருகின்றனர். தற்போது குன்னூர் அருகே சாலை விரிவாக்க பணி என்ற பெயரில் அதன் வழித்தடத்தை அழிப்பதால் அவை குடியிருப்புகளுக்குள் வரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்ட எச்சரிக்கை பதாகைகளை அகற்றி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. யானை வழித்தடத்தை அழிப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும்’, என்றனர்.

Tags : road ,Coonoor ,Mettupalayam ,elephant route ,Coonoor-Mettupalayam , Coonoor-Mettupalayam, Destroying ,elephant, route,work
× RELATED நீலகிரி அதிமுக அலுவலகம், வேட்பாளர் காரில் சோதனை