×

மேட்டுப்பாளையம் பூண்டு மாபியாக்களிடம் சிக்கி தவிக்கும் நீலகிரி விவசாயிகள்: அரசு கொள்முதல் மையத்திற்கு அனுப்புவதை தடுப்பதாக புகார்

ஊட்டி: மேட்டுப்பாளையம் பூண்டு மாபியாக்களிடம் சிக்கி தவிக்கும் நீலகிரி விவசாயிகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், முள்ளங்கி, பீட்ரூட், முட்டைகோஸ் உட்பட பல்வேறு காய்கறிகள் இங்கு பயிரிடப்படுகிறது. அதேபோல், ஒரு சில விவசாயிகள் பூண்டு விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பூண்டிற்கு நிறம், காரம் மற்றும் மருத்துவ குணங்கள் அதிகம். இதனால், வட மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் நீலகிரி பூண்டை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். அதுமட்டுமின்றி, பல்வேறு நாட்டு மருந்துகள் தயாரிக்கவும் இந்த பூண்டு கொண்டு செல்லப்படுகிறது. பூண்டு உட்பட மலை காய்கறிகள் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டாலும், கடந்த 100 ஆண்டுகளாகவே இவைகளை மேட்டுப்பாளையம் மண்டிகளில் வைத்தே ஏலம் விடப்படுகிறது. நீலகிரி மாவட்ட விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு கொண்டுச் சென்று, அங்குள்ள இடைத் தரகர்–்கள் அதனை ஏலம் ஏடுக்கின்றனர்.

பின், அவற்றை வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் கிடைக்கும் வருவாயை விட கஷ்டமே படாமல் இடைத்தரகர்கள் அதிக லாபம் சம்பாதித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, இவர்கள் அரசின் கொள்முதல் மையமான என்சிஎம்எஸ்.,க்கும் காய்கறிகளையும், பூண்டு போன்றவற்றை கொண்டுச் செல்லாமல் தடுக்கின்றனர். இதனால், நீலகிரி மாவட்ட விவசாயிகள் தாங்கள் கொண்டுச் செல்லும் காய்கறிகளை மண்டிகள் வைத்துள்ள இடைத்தரகர்களிடம் கொட்டிவிட்டு வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் விலை, தொகையை பெற்றுக் கொண்டு வீடு திரும்புகின்றனர். இந்நிலையில், தற்போது நீலகிரி பூண்டு கிலோ ஒன்று ரூ.400 வரை விற்பனையாகிறது.  இதனை வாங்கிச் செல்ல வெளி மாநிலங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் பலர் வருகின்றனர்.

ஆனால், இவர்களை விவசாயிகள் கண்ணில் காட்டுவதில்லை. மேலும், பூண்டினை தனியார் மண்டிகளில் போடாமல், அரசு கொள்முதல் மையமான என்சிஎம்எஸ்.,க்கு கொண்டுச் சென்று விற்பனைக்கு வைத்தாலும், அங்கு வெளி மாநில வியாபாரிகளை செல்ல விடாமல் தடுக்கின்றனர். என்சிஎம்எஸ்., கொள்முதல் மையத்திற்கு கொண்டுச் செல்லும், பூண்டினை வாங்க ஆளில்லாமல், 5 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை கிடப்பில் போடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், அதன் தரம், எடை குறைந்து விடுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மற்ற காய்கறிகளை காட்டிலும் பூண்டு வியாபாரத்திற்கு 4 அல்லது 5 வியாபாரிகள் மட்டுமே மேட்டுப்பாளையத்தில் இருந்தாலும், அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் இருந்து கொண்டு  செல்லும் பூண்டினை தங்களை தவிர வேறு யாருக்கும் விற்பனை செய்யவிடாமலும், இது போன்று அரசு கொள்முதல் மையத்திற்கு வியாபாரிகளை வர விடாமலும் தடுப்பது தொடர் கதையாக உள்ளது.

இந்த பூண்டு மாபியாக்களிடம் இருந்து நீலகிரி மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற நீலகிரி மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி, கோவை மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே நீலகிரி விவசாயிகளை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து நீலகிரி மாவட்ட காய்கறி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ரங்கசாமி கூறியதாவது:  நீலகிரி மாட்டத்தில் இருந்து ஆண்டு தோறும் சுமார் 8 ஆயிரம் டன் அளவிற்கு பூண்டு மேட்டுப்பாளையத்திற்கு விற்பனைக்கு கொண்டு  செல்லப்படுகிறது. இவை அனைத்தும் வட மாநில விவசாயிகள், வியாபாரிகள் விதைக்காக கொள்முதல் செய்கின்றனர். கடந்த பல ஆண்டுகளாக விதைக்கு இவர்கள் வாங்கிச் செல்கின்றனர். தற்போது ஒரு கிலோ பூண்டு ரூ.200 முதல் 350 வரை விற்பனை ஆகிறது. மேட்டுப்பாளையம் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் (என்சிஎம்எஸ்.,)  பல ஆண்டுகளாக பூண்டு விற்பனை நிறுத்தப்பட்டிருந்தது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் 17ம் தேதி முதல் மீண்டும் பூண்டு விற்பனை துவக்கப்பட்டுள்ளது. என்சிஎம்எஸ்., நிறுவனத்தில் கமிஷன் தொகையாக ரூ.3 மட்டுமே பெறப்படுகிறது. பணம் உடனுக்குடன் பட்டுவாடா செய்யப்படுகிறது. இத்தகைய சகல வசதிகளையும் கொண்டுள்ளதால் நீலகிரி மாவட்ட பூண்டு விவசாயிகள் என்சிஎம்எஸ்., நிறுவனத்திற்கு பூண்டு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். அதேசமயம், மேட்டுப்பாளையத்தில் உள்ள 5 தனியார் மண்டிகளில் மட்டுமே பூண்டு விற்பனை செய்யப்படுகிறது. அங்கு 10 சதவீதம் கமிஷன் தொகையும் பெறப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி பூண்டினை வாங்க வரும் வெளி மாநில விவசாயிகளை என்சிஎம்எஸ்., செல்லவிடாமல் தற்போது தனியார் மண்டி உரிமையாளர்கள் தடுத்து வருகின்றனர். இதனால், என்சிஎம்எஸ்.,க்கு கொண்டுச் செல்லும் பூண்டுகள் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளை பாதிப்பதுடன், அவர்களுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, வடமாநில வியாபாரிகள் என்சிஎம்எஸ்., மண்டிகளுக்கு வந்து பூண்டினை வாங்கிச் செல்லவும், தனியார் மண்டி உரிமையாளர்கள் அவர்களை தடுக்காத வண்ணமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், முறையாக ஏலம் நடத்தவும் நடவடிக்கை எடுத்து நீலகிரி மாாவட்ட விவசாயிகளை காக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். மேலும், இது தொடர்பான மனு ஒன்றை தமிழக முதல்வருக்கும் நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஊட்டியிலேயே ஏல மையம் ேதவை:
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் அனைத்தும் மேட்டுப்பாளையம் கொண்டுச் சென்ற பின்னரே, அங்கு ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஏற்று, இறக்கு கூலி, வாடகை கட்டணம் என பல வகையில் செலவு அதிகரிக்கிறது. மேலும், நேரமும் வீணாகிறது. அதேசமயம், நீலகிரி மாவட்டத்தில் ஏல மையங்கள் இருந்தால் இங்கு காய்கறிகளையும், பூண்டினையும் விற்பனை செய்வார்கள். இதன் மூலம் செலவு மிகவும் குறைய வாய்ப்புள்ளது. எனவே, அரசு நீலகிரி மாவட்டத்தில் ஏல மையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் என்சிஎம்எஸ்.,ல் பூண்டு ஏலம் நடக்காத நிலையில், விவாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் முதல் மீண்டும் ஏலம் துவங்கியுள்ளது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக நீலகிரி பூண்டு ‘ருசி’ பார்த்த இடைத்தரகர்கள், அதனை விட்டுக் கொடுக்க மனம் இன்றி, தற்போது என்சிஎம்எஸ்.,ற்கு விவசாயிகளையும், வியாபாரிகளையும் செல்லவிடாமல் தடுக்கின்றனர்.


Tags : Nilgiris ,Mettupalayam ,garlic mafia ,procurement center ,government ,Garlic Mafia Suffering Nilgiri , Mettupalayam, Trapped ,Nilgiri ,farmers, procurement center
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது