×

தமிழக எல்லையான ஜூஜூவாடியில் இ-பாஸ் சோதனை: கர்நாடக வாகனங்கள் தடுத்து நிறுத்தம்

ஓசூர்: தமிழக எல்லையான ஜூஜூவாடியில் கர்நாடக வாகனங்களை தமிழக போலீசார் தடுத்து நிறுத்தி இ பாஸ் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழக அரசு செப்டம்பர் மாத ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் இ- பாஸ் நடைமுறையை ரத்து  செய்துள்ளது. அதே நேரம் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் இ பாஸ் பெற வேண்டும் என கூறியுள்ளது. மேலும், பல்வேறு  தளர்வுகள் வழிகாட்டு நெறிமுறைகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளன.இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்  நகரில் பிரசித்திப்பெற்ற சந்திர சூடேஸ்வரர் கோயிலில் நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். உடல் வெப்பம்  பரிசோதனை, கை சுத்தம் செய்து  கொள்வது, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புகளுடன்  அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10  வயதிற்குட்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை. தீர்த்த பிரசாதம் இல்லை.  ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளியுடன் கோயிலுக்குள்  அனுமதிக்கப்படுகிறது. இ-பாஸ்  நடைமுறை ரத்து செய்யப்பட்டு, மாவட்டங்களுக்கு இடையேயான வாகன போக்குவரத்து நேற்று தொடங்கியது. ஆனால், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு  வரும் கார்கள் உள்ளிட்ட பயணிகள் வாகனங்கள், மாநில எல்லைப்பகுதியில் தடுத்து  நிறுத்தப்பட்டு இ-பாஸ் சோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள்  அனுமதிக்கப்படுகின்றன.

அந்த வகையில் தமிழக எல்லைப்பகுதியான  ஜூஜூவாடியில், தமிழக காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கர்நாடக  மாநிலத்திலிருந்து தமிழகம் நோக்கி வந்த கார்கள் உள்ளிட்ட பொதுமக்கள்  வாகனங்களை தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் இ- பாஸ் அனுமதி உள்ளதா என சோதனை செய்த பின்னரே  தமிழகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர். ஆனால், கர்நாடக மாநில  எல்லைப்பகுதியில், எந்த சோதனையும் நடைபெறாததால் வழக்கம்போல தமிழகத்தில் இருந்து சென்ற கார்கள்  உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து அந்த மாநிலத்திற்கு சென்று வருகின்றன.



Tags : border ,Tamil Nadu ,Karnataka , E-pass,Jujuwadi ,Tamil Nadu ,Karnataka, vehicles ,stopped
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லைப் பகுதியில்...