×

பிரதமர் மோடி பாராட்டிப் பேசிய ராஜபாளையம், சிப்பிப்பாறை நாய் இனத்தை காக்கவேண்டும் : கலப்பினங்களை தடுக்கவும் வலியுறுத்தல்

ராஜபாளையம்: பிரதமர் மோடி பாராட்டிய ராஜபாளையம், சிப்பிப்பாறை உள்ளிட்ட நாட்டு நாய்கள் இனத்தை மேம்படுத்திடவும், இதில் கலப்பினங்கள் பெருகுவதை தடுத்து நிறுத்திடவும் கோரிக்கை எழுந்துள்ளது.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சிப்பிப்பாறை உள்ளிட்ட இந்திய நாய் வகைகள் மிகச் சிறப்புக்குரியது. நாட்டு நாய் வகைகளை வளர்க்க மக்கள் முன் வரவேண்டும் என்று பிரதமர் மோடி, ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசினார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. பிரதமர் குறிப்பிட்ட ராஜபாளையம் நாய் இனங்கள் போர்வீரனுக்கு இணையான வலிமை கொண்டவை. ஒரு வேட்டையின்போது 4 ராஜபாளையம் நாய்கள் சேர்ந்து, புலியை வீழ்த்தி எஜமானனைக் காப்பாற்றியதாக இவை பற்றிய கதைகள் உண்டு. இந்திய ராணுவம் காஷ்மீர் எல்லையில் காவல் புரிய இந்த நாய்களை பயன்படுத்துகிறது.

சிப்பிப்பாறை, படு புத்திசாலி. இதன் வேகத்துக்கு இணையான நாய் கிடையாது. ஞாபகசக்தி அதிகம். தன் எஜமானனையும், எதிரிகளையும் ஞாபகத்தில் வைத்திருக்கும். மற்றொரு இனமான கோம்பை, காவலுக்கு உகந்தது. அக்காலத்தில் பண்ணை வீடுகளில் ஆடு, மாடுகளை காட்டு விலங்குகள் வேட்டையாடாமல் தடுத்தது.உள்ளூர் நாட்டு நாய்களை பொறுத்தவரை நாய்களில் ராஜபாளையம், சிப்பிப்பாறை, அலங்கு, கோம்பை, மலையேறி, கன்னி போன்ற இனங்கள் மிகப் பிரபலம். 1980களுக்கு பிறகு இந்த இன நாய்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வருகிறது. வேட்டைக்குத் தடை வந்ததும், இவற்றை வளர்ப்பதும் குறைந்து விட்டது. பலர் வெளிநாட்டு வகை நாய்கள் மீது ஆர்வம் கொண்டனர். இதனால் மலையேறி, அலங்கு இன நாய்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.பொதுவாக பெண் நாய்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறைதான் இனப்பெருக்கத்துக்குத் தயாராகும். மற்ற நேரங்களில் ஆண் நாய்களை அண்ட விடாது. இந்த இனப்பெருக்க நேரத்தில் பெண் நாய்களை, ஆண் நாய்களுடன் சேர்ப்பது, அவற்றுக்கு தனி கவனிப்பு, மற்ற ஆண் நாய்களிடமிருந்து பாதுகாப்பும் தர வேண்டும். இப்படிப் பார்த்துப் பார்த்து குட்டிகள் உருவாக்கப்படுவதாலும், இந்த உள்ளூர் நாய்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதனால், ராஜபாளையம், சிப்பிப்பாறை போன்ற இனங்களில் பல ஏமாற்று வேலைகளும் நடக்கின்றன. கலப்பினமான நாய்களை உருவாக்கி விடுகின்றனர்.

நாய் பண்ணை நிர்வாகி இளஞ்சேரன் கூறும்போது, ‘‘மக்களிடம் வரவேற்பு இல்லாத வகைகள் அதிகம் இனப்பெருக்கம் செய்யப்படுவதில்லை. கன்னி, கோம்பை போன்றவை மக்களுக்கு தெரிவதில்லை. ராஜபாளையம், சிப்பிப்பாறை என்றே கேட்கின்றனர். இதனால் இவ்விரு இனங்களே இனப்பெருக்கமாகிறது. ஓர் இனத்தை அதே இன நாய்களோடு மட்டுமே இனப்பெருக்கம் செய்வது ‘ப்யூர் பிரீட்’. வெவ்வேறு இனங்களைக் கலந்து இனப்பெருக்கம் செய்வது ‘க்ராஸ் பிரீட்’. நம் உள்ளூர் நாய்கள் பல இல்லாமல் போனதற்கு
இந்த கலப்பின இனப்பெருக்கமும் ஒரு காரணம்.ராஜபாளையம் போன்ற நாய்களை வெளிநாடுகளுக்குக் கொண்டு போய், மற்ற இனங்களுடன் இனப்பெருக்கத்துக்கு விடுகின்றனர். இதனால் நம் உள்ளூர் நாயே புதிய வெளிநாட்டு இனமாக இங்கு வந்து நுழைகிறது. நாட்டு நாய் இனங்களை மேம்படுத்த வேண்டும். இதில் கலப்பினத்தை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்கிறார்.

Tags : Modi ,Rajapalayam ,Sippiparai , Rajapalayam ,praises ,Prime, Minister, Modi, Sippiparai
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!