×

கொரோனா நெருக்கடியில் பணியாற்றுபவர்களுக்கு பாதுகாப்பில்லை நிர்வாக குளறுபடிகளால் மனஅழுத்தத்தில் டாஸ்மாக் பணியாளர்கள்: காலமுறை ஊதியத்துடன், இஎஸ்ஐ திட்டத்தில் இணைக்க கோரிக்கை

வேலூர்: அரசின் கஜானாவை நிரப்பும் முக்கிய காரணியான டாஸ்மாக் மதுக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் முறையான ஊதிய வரையறையின்றியும், இஎஸ்ஐ திட்டத்தில் இணைக்கப்படாமலும், நிர்வாகத்தின் நீடித்த குளறுபடிகள், அதிகாரிகளின் தேவையற்ற அழுத்தங்களாலும் கடுமையான மனஅழுத்தத்தில் தள்ளப்பட்டுள்ளதாக வேதனை குரல்கள் எழுந்துள்ளன.அரசுக்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டித்தரும் காமதேனு நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக்கழகமான டாஸ்மாக் நிர்வாகம் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி என ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஐந்து மண்டலங்களும் மண்டல மேலாளர்களின் கீழ் செயல்படுகின்றன. இவை மேலும் 33 டாஸ்மாக் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் மாவட்ட மேலாளரின் கீழ் இயங்கி வருகிறது.
கடந்த 2010ம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 6,500 மதுக்கடைகளும், இவற்றுக்கான சேமிப்பு கிடங்குகள் 41ம் இருந்தன. மொத்தம் 36 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். தற்போதைய நிலையில் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் 5,436 கடைகள் உள்ளன. கடை சூபர்வைசர்கள் 8,627 பேரும், விற்பனையாளர்கள் 17,232 பேரும் உள்ளனர்.

இவர்களில் சூபர்வைசர்களுக்கு 12,500ம், விற்பனையாளர்களுக்கு 10,750ம், உதவியாளர்களுக்கு 8,600ம் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. இவர்கள் அரசு நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், ஏனைய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் 8 மணி நேர வேலை, ஊதியத்துடன் கூடிய விடுமுறை என எச்சலுகையும் இல்லை. கூடுதல் பணி நேர கூலி கூட கோர்ட் வழக்கில் கிடைத்த தீர்ப்புக்கு பின்னரே கிடைத்ததாக கூறுகின்றனர் டாஸ்மாக் பணியாளர்கள்.இதனால் தங்களுக்கு 8 மணி நேர வேலை, காலமுறை ஊதியம், இஎஸ்ஐ வசதி ஆகிய முக்கிய கோரிக்கைகளை கடந்த 17 ஆண்டுகளாக அரசிடம் கேட்டு வருகின்றனர். மேலும் கேரள மாநிலத்தில் உள்ளது போல மதுக்கடைகளின் நிர்வாக நடைமுறைகளை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அங்கு பணியாளர்களுக்கு நிரந்தர நிர்ணயிக்கப்பட்ட ஊதியம், 8 மணி நேர வேலை என்பதுடன், மதுக்கடையில் மது வழங்கும் பிரிவும், கம்ப்யூட்டர் பில்லிங் பிரிவும் தனித்தனியாக உள்ளது. பணம் செலுத்தி  தாங்கள் வாங்க விரும்பும் மதுவுக்கான பில்லை பெற்று வந்து விற்பனை பிரிவில் செலுத்தி பாட்டிலை பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதேபோல் மது வழங்கும் பிரிவு, பில்லிங் பிரிவு என இரண்டிலும் கிரில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு நுகர்வோர்கள் வரிசையில் வருவது உறுதி செய்யப்படுகிறது. இந்த நடைமுறை மூலம் நுகர்வோரிடம் இருந்து ஒரு ரூபாயை கூட மிச்சமாக பெற முடியாது. மேலும் சரக்கு ஏற்று, இறக்கு கூலி, கடைக்கான மின்கட்டணம் என அனைத்தும் கடையில் இருந்தே செலுத்தப்பட்டு அதன் வவுச்சர்கள் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு விடும்.மேலும் தண்ணீர், தேனீர் வசதியும் கேரளாவில் வழங்கப்படுகிறது. அத்துடன் போக்குவரத்து படி, சீருடையும் வழங்கப்படுகிறது. பாட்டில் சேதமடைந்தால் அதற்கான இழப்பீடும் 0.01 சதவீதம் வழங்கப்படுகிறது. இதுதவிர ஒரு கடை என்றால் எவ்வளவு சதுரஅடி பரப்பளவில் இருக்க வேண்டும். மின்வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி என அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுகிறது.ஆனால் தமிழகத்தில் அதற்கான சட்டம் இருந்தாலும் அதை பின்பற்றுவதில்ைல. குறைந்த தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இஎஸ்ஐ வசதியில்லை. சரக்கை குடோனில் இருந்து கடை வாசல் வரை கொண்டு வருவதை மட்டுமே நிர்வாகம் செய்கிறது.

 சரக்குகளை இறக்கி கடைக்குள் அடுக்குவதை விற்பனையாளரும், சூபர்வைசருமே மேற்கொள்ள வேண்டும். பாட்டில்கள் சேதார இழப்பையும் விற்பனையாளர்களே ஏற்க வேண்டும். மேலும் தண்ணீர், தேனீர் வசதியில்லை. கழிவறை வசதியில்லை.இதுதவிர பாருடன் சேர்த்தே பெறப்பட்டுள்ள கடையின் மின்இணைப்பால், மின்கட்டணம் செலுத்துவதில் முரண்பாடு ஏற்பட்டு அதற்கான இழப்பையும் விற்பனையாளர்களே ஏற்க வேண்டும். இதுபோன்ற பல இடர்பாடுகளை ஒவ்வொரு மாதமும் சந்தித்து வரும் நிலையில், மாதந்தோறும் அதிகாரிகளுக்கு மாமூல், கடையில் திருட்டு போனால் ஏற்படும் இழப்பை ஏற்கும் நிலை, தேவையற்ற புகார்களை கூறி பணியாளர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்குதல், கொரோனா நெருக்கடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை என பல்வேறு நிர்வாக சிக்கல்களை தாங்கள் சந்தித்து வருவதாக டாஸ்மாக் பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, 17 ஆண்டுகளாக அரசிடம் கேட்டு வரும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன், கேரள மாநில பாணியில் மதுக்கடைகளை வரைமுறைப்படுத்தி பணியாளர்களுக்கு மனநிம்மதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சில்லரை மது விற்பனையை அரசு எடுத்தது ஏன்?
தமிழகத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் எனப்படும் டாஸ்மாக் கடந்த 1983ம் ஆண்டு தமிழகத்தில் மது வகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது. தமிழகத்தில் 2001ல் மதுவிலக்கு விலக்கிக் கொள்ளப்பட்ட போது, மீண்டும் மது மொத்த விற்பனை நிறுவனமாக டாஸ்மாக் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. அப்போது சில்லரை மது விற்பனை கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டன. ஆனால் பல கடை முதலாளிகள் தங்களுக்குள் சிண்டிகேட் ஏற்படுத்திக் கொண்டு கடைகளை குறைந்த ஏலத்துக்கு எடுத்தனர். இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும் கடந்த 2002-2003ம் நிதியாண்டில் அரசு ஏலமுறையை மாற்றி அமைத்தது. ஒரே சீரான வருவாயுள்ள மதுக்கடைகள் ஏலம் விடப்பட்டு குலுக்கல் முறையில் கடைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

 இதுவும் பலனளிக்காமல் போகவே வேறுவழியின்றி கடந்த 2003ம் ஆண்டு மாநில அரசு மதுபான சில்லரை விற்பனையையும் டாஸ்மாக் மூலமே மேற்கொள்ள முடிவு செய்து அதற்கான சட்டத்திருத்தத்தை கொண்டு வந்து அமல்படுத்தியது. அதன்படி கடந்த 2003ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் தொடங்கப்பட்டன. இதன் மூலம் அரசுக்கு பெரும் வருவாய் ஆதாரம் கிடைக்கவே, அடுத்தடுத்து வந்த அரசுகள் டாஸ்மாக் மதுபான கடைகளை தொடர்ந்து நடத்துவதை உறுதி செய்தன. தற்போதைய நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி வரை வருவாயாக கிடைக்கிறது. இவ்வருவாய் ஒவ்வொரு ஆண்டும் 20 சதவீதம் என்ற ரீதியில் உயர்ந்து வருகிறது.



Tags : incorporation ,Tasmac ,ESI ,crisis ,ESI scheme ,Corona , Tasmac ,employees, Corruption , Corona, ESI ,scheme
× RELATED வாரிசு சான்றிதழ் பெற மே 12க்குள் விண்ணப்பிக்கலாம்: இஎஸ்ஐ தகவல்