கொரோனா ஊரடங்கால் 5 மாதமாக பரிதவிப்பு மாற்றுத்திறனாளி தம்பதிக்கு வங்கி கடன் வழங்க ஏற்பாடு: கலெக்டர் நடவடிக்கை

மன்னார்குடி: கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளி தம்பதிக்கு தினகரன் செய்தி எதிரொலியால் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மானியத்துடன் கூடிய வங்கி கடன் கிடைக்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(35).இவரது மனைவி பிரியா (30)காதுகேட்காத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு லோகேஷ் (3) என்ற மகனும், சாதனா (2) என்ற மகளும் உள்ளனர். ராதாகிருஷ்ணன் மலேசியாவில் வேலை பார்த்த போது நடந்த விபத்தில் அவரால் அங்கு தொடர்ந்து வேலை பார்க்க முடியாமல் சொந்த ஊரான சித்தேரி கிராமத்திற்கு வந்து பெட்டி கடையை நடத்தி வந்தார். இதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் மாற்றுதிறனாளி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அன்றாட குடும்ப தேவைகளை கூட கவனிக்க முடியாமல் வேதனையுடன் வாழ்க்கையை நகர்த்தி வந்தார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதமாக பெட்டி கடையில் கிடைத்து வந்த சொற்ப வருமானமும் இல்லாமல் போனது. குழந்தைகளுக்கு பால் வாங்கி கொடுக்க கூட பணமின்றி சாதம் வடித்த கஞ்சியை பாட்டிலில் ஊற்றி கொடுத்து வந்தனர். வறுமை காரணமாக பலமுறை தற்கொலை எண்ணம் தலை தூக்கினாலும் இரண்டு குழந்தைகளுக்காக அதனை தவிர்த்து வந்துள்ளனர். இவர்களின் அவல நிலை குறித்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன் படத்துடன் விரிவான செய்தி தினகரன் நாளிதழில் பிரசுரமானது.இதையடுத்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளை நேரில் அழைத்து சித்தேரி கிராமத்திற்கு சென்று ராதாகிருஷ்ணன், பிரியா தம்பதியினருக்கு தேவையான அனைத்து உதவிகள், அவர்களின் வாழவதாரத்திற்காக மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க ஏற்பாடு செய்யும் படி உத்தரவிட்டார். அதன்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் (பொ) புவனா, மூடநீக்கியல் வல்லுநர் ரேகா ஆகியோர் சித்தேரி கிராமத்திற்கு சென்று ராதாகிருஷ்ணன், பிரியா தம்பதியினரை சந்தித்து அரிசி, மளிகை, காய்கறிகள், பால் பாக்கெட்டுகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

மேலும், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உடனடியாக கிடைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதே போல் சமூக ஆர்வலர்கள் மன்னை மகேந்திரன், பழனிச்செல்வன் ஆகியோரும் அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை அதிகாரிகளின் முன்னிலையில் வழங்கினர்.மாற்றுத் திறனாளிகளுக்கான டிசம்பர் 3 இயக்கத்தின் நிர்வாகிகள் ராஜேஷ், ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.இதுகுறித்து தம்பதியினர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளான எங்கள் குடும்பத்தின் அவலநிலை குறித்து தினகரன் நாளிதழ் வெளியிட்ட செய்தி காரணமாக எங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உடனடியாக துரித நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், தினகரன் நாளிதழ் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என கூறினர்.

Related Stories: