×

சாராய கும்பலை பிடிக்க 3வது நாளாக முகாம் மலையில் இருந்து கீழே இறங்கியபோது டிராக்டர் கவிழ்ந்து 10 போலீசார் படுகாயம்: துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய 3 பேர் மீது வழக்கு

அணைக்கட்டு: அணைக்கட்டு அருகே சாராய கும்பலை பிடிக்க 3வது நாளாக முகாமிட்டுள்ள போலீசார் மலையில் இருந்து இறங்கியபோது டிராக்டர் கவிழ்ந்தது. இதில் 10 போலீசார் படுகாயமடைந்தனர். இதற்கிடையே போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மிரட்டல் விடுத்ததாக சாராய கடத்தல்காரர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலை கிராமத்துக்கு கடந்த 29ம் தேதி கள்ளச்சாராய வேட்டைக்கு சென்ற அணைக்கட்டு காவல் நிலைய போலீசார் மீது சாராய வியாபாரிகள் தாக்குதல் நடத்தினர். இதில்  2 போலீசார் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குற்றவாளிகளை பிடிக்க கடந்த 30ம் தேதி முதல் போலீசார் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர்  கிராமம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். சாராயம் காய்ச்சும் கும்பலை பிடிக்க வீடுவீடாக  சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று 3வது நாளாக போலீசார் விடியவிடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு  பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. நேற்று அதிகாலை அங்குள்ள  மலையடிவாரப்பகுதி அருகே சுற்றித்திரிந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, சத்துவாச்சாரி போலீஸ் எஸ்ஐ செல்வராஜ் தலைமையிலான 2 போலீசார்  நேற்று முன்தினம் ஊசூர் அடுத்த சிவநாதபுரம் கிராமத்திற்கு சென்றனர். அப்போது,  பதிவெண் இல்லாத பைக்கில் வந்த 3 பேர் கும்பல், திடீரென போலீசாரை வழிமறித்து  நாட்டு துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுதொடர்பாக நெல்லிமரத்துக்கொல்லை கிராமத்தை சேர்ந்த சத்யராஜ் உட்பட 3 பேர் மீது  அரியூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். சாராய கும்பலை பிடிக்க போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 3வது நாளான நேற்று மலையில் இருந்து போலீசார் 10 பேர் டிராக்டரில் கீழே இறங்கி கொண்டிருந்தனர். நடுவழியில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் பயணம் செய்த போலீசார் 10 பேரும் படுகாயமடைந்தனர். ஏட்டு ஒருவருக்கு கை முறிந்தது. போலீஸ் அதிகாரிகள் அங்கு சென்று அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



Tags : policemen ,camp hill ,Camp ,mountain , Camp,alcoholic,mountain 10 policemen, , threatening , shoot
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்