நகரங்களுக்கு வரும் மக்களுக்கு அபராதம் போடும் விதமாக சுங்கக் கட்டணக் கொள்ளை அடிக்காமல் டீசல், பெட்ரோல் விலை குறைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: கொரோனா நோய்த்தொற்று காரணமாக, அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்க அறிவிப்புகளால் இந்தியப் பொருளாதாரம் (உள்நாட்டு உற்பத்தி)  ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இதுவரை இல்லாத வகையில் 23.9 சதவிதப் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடும் முறை தொடங்கப்பட்ட 1996ம் ஆண்டுக்குப் பிறகு, இப்போது தான் இந்த அளவுக்கு முதல் முறையாகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்று  சொல்வதும் மத்திய அரசு தான். இந்த வகையில் பார்த்தால், சாதாரண மனிதன் அடைந்துள்ள பொருளாதார வீழ்ச்சி அதைவிட அதிகமானது, மோசமானது. இதனைக் கவனத்தில் கொண்டு அல்லவா அரசாங்கம் செயல்பட வேண்டும்?பசியில் வாடும் மனிதனுக்குச்  சோறு போடாமல், “கொஞ்சம் பொறு, உன்னிடம் கொஞ்சம் ரத்தத்தை உறிஞ்சிக் கொள்கிறேன்” என்பதைப் போலவே  செயல்பாடுகள் அமைந்து இருக்கின்றன. நகரங்களை நோக்கி வந்து மீண்டும் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க இருக்கும் அப்பாவிகளுக்கு அபராதம் போடும் வகையில், சுங்கக் கட்டணக் கொள்ளையைச் செய்யாதீர்கள் ! பெட்ரோல்,  டீசல் விலையைக் குறையுங்கள் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

பொதுமுடக்கத்தைத் தளர்த்துவதன் மூலமாக, கொரோனா ஒழிந்து விட்டது என்றோ, நாளை காலைமுதல் நாட்டின் பொருளாதாரம் எழுந்து நின்றுவிடப்போகிறது என்றோ, மாநில அரசு தவறான சிந்தனையில் மூழ்க வேண்டாம். மாநில அரசும், மக்களுக்குப் பொருளாதார உதவிகள், சலுகைகள் வழங்குவதன் மூலமாக, ஏழை எளிய நடுத்தர மக்களின்  துன்ப துயரங்களில் தோள் கொடுத்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>