×

கோபியில் வருமான வரித்துறையினர் சோதனை உர ஆலை அதிபர் வீட்டில் 4 கோடி சிக்கியது

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி கச்சேரிமேடு நகர் அருகே ராயல் பெர்ட்டிலைசர் கார்ப்ரேஷன் என்ற உர தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.  இங்கு விவசாயத்திற்கு தேவையான கலப்பு உரம் மற்றும் பூச்சி மருந்து தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. உர தொழிற்சாலையின்   உரிமையாளரான சோமசுந்தரம்(60) தொழிற்சாலைக்கு பின்னால் உள்ள நகரில் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கோவை, ஈரோட்டில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட வருமானத்துறை அதிகாரிகள்  சோமசுந்தரத்தின் வீட்டில் சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.4 கோடியை வருமானவரித்துறையினர்  பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரது தொழிற்சாலையிலும் இரு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் சிலவற்றை  கைப்பற்றியதாக கூறப்படுகிறது. சுமார் 8 மணி நேரம் இந்த சோதனை நடந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து சோமசுந்தரத்திடம் அதிகாரிகள் விசாரித்தபோது, சோமசுந்தரம் மற்றும் அவரது உறவினர்கள் 12 பேர் சேர்ந்து  நேற்று முன்தினம் கோபியில் நிலம் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணம் என்றும், அந்த பணத்தை 12 பேருக்கும் நேற்று பிரித்து  கொடுப்பதற்காக வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து அந்த பணத்திற்கு உரிய ஆவணங்களை சமர்பித்த பிறகு பணத்தை பெற்றுக்  கொள்ள வரும்படி வருமானவரித்துறையினர் கூறிவிட்டு பணம் மற்றும் ஆவணங்களுடன் புறப்பட்டு சென்றனர்.

10 ஆண்டுக்கு முன்பும் ஐ.டி. ரெய்டு
கடந்த 15 ஆண்டுக்கு முன்பு சோமசுந்தரம் கோபியில் உள்ள மற்றொரு உர நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்கிருந்து நின்ற பின் தனியாக உர  நிறுவனம் தொடங்கி பத்து ஆண்டுக்கும் மேலாக நடத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுக்கு முன் இவரது வீட்டில் வருமானவரித் துறையினர் ஏற்கெனவே சோதனை செய்தனர். அதன் பின்னர் தற்போது மீண்டும்  சோதனையில் ஈடுபட்ட போது 4 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோமசுந்தரம் கோவையில் உள்ள தனியார் பொறியியல்  கல்லூரி ஒன்றில் நிர்வாகியாகவும் பொருளாளராகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : house ,Gopi ,Income Tax Department ,fertilizer plant owner ,Kobe , Income, tax , Kobe, house , fertilizer ,plant ,
× RELATED சென்னை முழுவதும் நடத்தப்பட்ட...