×

விசாரணைக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கியதால் ஆட்டோ டிரைவர் தற்கொலை: காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

துரைப்பாக்கம்: விசாரணைக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கியதால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (45). ஆட்டோ டிரைவர். இவருக்கு அனிதா என்ற மனைவியும், ரஞ்சிதா, கவிதா, சினேகா என்ற  மகள்களும் உள்ளனர்.  ராஜேந்திரனின் உறவினர் முல்லா (எ) சிவகுமார் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இவர், நேற்று முன்தினம்  ராஜேந்திரன் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்றனர். அதற்குள் சிவகுமார்  அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.இதனால், ராஜேந்திரனை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார், அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இவர் மீது  எந்த வழக்கும் இல்லாததால் பின்னர் அவரை விடுவித்துள்ளனர்.

அங்கிருந்து வீட்டிற்கு சென்ற ராஜேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும்  பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, ராஜேந்திரனை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனிடையே ராஜேந்திரன் சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு வந்த உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீஸ் உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை  எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.



Tags : Auto driver ,suicide ,questioning ,Relatives ,police station ,trial Auto driver , Take , trial, Auto,driver ,commits ,suicide
× RELATED ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்ட பெண்ணை...