×

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை வழங்கவில்லை: பெற்றோர்கள் புகார்

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்கள் மூலம்  மாணவர்களுக்கு சத்துணவு வழங்க, திட்டம் வகுக்க கோரி வழக்கறிஞர் சுதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு  தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவர்களுக்கு அரசு தொடர்ந்து முட்டை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று  உத்தரவிட்டது. மேலும் மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து முட்டைகள் வழங்கலாம் என்றும், முட்டைகளை தினந்தோறும்  வழங்குவதா அல்லது வாரம்தோறும் மொத்தமாக வழங்குவதா உள்ளிட்ட விஷயங்களை அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டது.  ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டும் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இதுவரை முட்டை வழங்கப்படவில்லை என்று பெற்றோர்கள்  தெரிவித்துள்ளனர். சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் 281 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளகளில் மொத்தம் 83 ஆயிரம் மாணவர்கள் பயின்று  வருகின்றனர்.

இதில் 1 முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை வழங்கப்படுகிறது. இதன்படி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 50 ஆயிரம்  மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவர்களுக்கு இதுவரை முட்டை வழங்கப்படவில்லை  என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், “சென்னை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் எங்களுக்கு மார்ச்  மாதத்திற்கு மட்டும் மதிய உணவு திட்டத்தின் கீழ் ரேஷன் பொருள் வழங்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு வழங்கப்படவில்லை.மேலும், எங்களிடம் மொபைல் உள்ளது. ஆனால் அதற்கு இன்டெர்நெட் பயன்படுத்த ரீசார்ஜ் செய்ய முடியவில்லை. இதனால், பெரும்பலான பள்ளி  மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளது,’’ என்றனர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆன்லைன் வகுப்பில் எடுக்கப்படும் பாடங்கள் அனைத்தும் வீடியோ வடிவில் யுடியூப்  பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது’’ என்றனர்.



Tags : High Court ,corporation ,Parents ,school ,High Court Corporation School , Ordered, High Court, School, Students,Complain
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...