யுஎஸ் ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் ஒசாகா: ஜோகோவிச் முன்னேற்றம்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட  ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா தகுதி  பெற்றார். முதல் சுற்றில் சக வீராங்கனை மிசாகி டோய் உடன் மோதிய ஒசாகா 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை வசப்படுத்தி முன்னிலை பெற்றார். 2வது  செட்டில் அதிரடியாக விளையாடி நெருக்கடி கொடுத்த மிசாகி 7-5 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. எனினும், 3வது சுற்றில்  சுதாரித்துக் கொண்டு புள்ளிகளைக் குவித்த ஒசாகா 6-2, 5-7, 6-2 என்ற கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.முன்னணி வீராங்கனைகள் கரோலினா பிளிஸ்கோவா (செக்.), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), அனஸ்டேசியா செவஸ்டோவா (லாட்வியா), கிறிஸ்டினா  மிளாடெனோவிச் (பிரான்ஸ்), பெத்ரா குவித்தோவா (செக்.) ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-4, 6-1 என்ற நேர் செட்களில் டாமிர்  தும்ஹரை (போஸ்னியா) எளிதில் வீழ்த்தினார். ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), டெனிஸ் ஷபோவலாவ் (கனடா), டேவிட் காபின் (பெல்ஜியம்)  ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

இனவெறி எதிர்ப்பு முகக்கவசம்...

யுஎஸ் ஓபன் முதல் சுற்றில் களமிறங்கிய ஒசாகா, இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்பு முகக் கவசம் அணிந்து விளையாடினார்.  அதில், அமெரிக்காவில் மார்ச் மாதம் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட  கறுப்பின செவிலியர்  ப்ரியோனா டெய்லர் பெயர் எழுதப்பட்டிருந்தது.  இனவெறிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஒசாகா, சமீபத்தில் நடந்த வெஸ்டன் &  சதர்ன் ஓபன் தொடரின் அரையிறுதியில் விளையாட  மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அவரது எதிர்ப்பு நியாயமானது என அங்கீகரித்த அமெரிக்க டென்னிஸ் சங்கம், இனவெறிக்கு எதிராக ஒருநாள்  முழுவதும் போட்டிகளை ரத்து செய்தது.

Related Stories:

>