×

இ.எம்.ஐ அவகாசத்தை இரண்டு ஆண்டுகள் வரை கூட நீட்டிக்க முடியும்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: இ.எம்.ஐ அவகாசத்தை இரண்டு ஆண்டுகள் வரை கூட நீட்டிக்க முடியும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால் தனியார் வங்கிகளோ கடனை செலுத்தியே ஆக வேண்டும் என மக்களை கட்டாயப்படுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு பிறகு வங்கிக்கடன் செலுத்த கால அவகாசம் நீடிக்கப்படாது என தனியார் வங்கிகள் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே வட்டி செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசத்தை ரிசர்வ் வங்கி வழங்கியது. ஆனால் இஎம்ஐ முறையில் கடனை செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் வட்டிக்கு வட்டி வசூலிப்பதாக ஆக்ராவை சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பாக மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டது. ஆனால் மத்திய அரசு விளக்கமளிக்காத சூழலில் பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் கேட்டது. அப்போது கொரோனா பொது முடக்கத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவது மத்திய அரசின் கடமைதான் .வட்டி வசூல் தொடர்பாக ரிசரவ் வங்கியை காரணம் காட்டி மத்திய அரசு தப்பித்துக்கொள்வதை ஏற்க முடியாது.

எப்போதும் ரிசரவ் வங்கியின் பின்னால் மத்திய அரசு ஒளிந்திருப்பதை வழக்கமாக கொண்டுள்ளீர்கள். கடன் செலுத்துவோரின் பாதிப்புக்கு மத்திய அரசின் பொது முடக்க உத்தரவே காரணம் என்று உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இ.எம்.ஐ அவகாசத்தை 2 ஆண்டுகள் வரை கூட நீட்டிக்க முடியும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி பதில் அளித்தன. இந்நிலையில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் ரிசர்வ் வங்கியின் நடைமுறை குறித்து நாளை உரிய முடிவு எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags : EMI , EMI, Supreme Court, Central Government, Reserve Bank
× RELATED குழந்தைகளைக் கவனிக்க ஆண் அரசு...