×

பாதுகாப்பு நடைமுறைகளுடன் இன்று முதல் வணிக வளாகங்கள் திறப்பு

சென்னை: உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் இன்று முதல் வணிக வளாகங்களை திறக்க உத்தரவிட்டுள்ள தமிழக அரசு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது. விபரம் வருமாறு: வணிக வளாகத்தில் வாடிக்கையாளர்கள், ஊழியர்களுக்கு இடையே  6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். வளாகத்திற்குள் எச்சில் துப்பக் கூடாது. உடலில் வெப்பம் அதிகரித்தால் உரிய உதவி மையத்தை அழைக்க வேண்டும். ஆரோக்கிய சேது அப் பதிவிறக்கம் செய்யலாம். வாயில்களில் சானிடைசர்கள் வைக்க வேண்டும். தெர்மல் ஸ்கேனர் மூலம் உள்ளே வருபவர்கள் சோதிக்கப்பட வேண்டும். வளாகத்திற்குள் உள்ள நுழையவும், வெளிய வரவும் தனித்தனி வழிகளை அமைப்பது நல்லது.

 உணவகங்கள், கடைகளில் உரிய இடைவெளி விட்டு இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும். லிப்டுகளில் செல்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். எஸ்கலேட்டரில்  (நகரும் படிக்கட்டு) செல்லும்போது ஒருவருக்கு ஒருவர் ஒரு படி இடைவெளியில் செல்ல வேண்டும். வணிக வளாகத்தில் ஏர்-கண்டிசன் அமைக்கப்பட்டிருந்தால் அதன் குளிர்நிலை 24 முதல் 30 டிகிரி செல்சியஸ் என்ற நிலை கடைபிடிக்கப்பட வேண்டும். இசை கச்சேரிகள், பாராட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார விழாக்கள் கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும். உணவு பொருட்களுக்கான தொகையை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செலுத்த வேண்டும். குழந்தைகள் விளையாட்டு பகுதிகளும் மூடப்பட வேண்டும். வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். 65 வயதுக்கு மேல் உள்ளவர்களும், 10 வயதுக்கு குறைந்தவர்களும் வணிக வளாகங்களுக்கு வருவதை தவிர்க்குமாறு வளாக நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.

* பூங்காவில் 50% நபர்களுக்கு மட்டுமே அனுமதி
பூங்காவின் நுழைவு வாயில்களில் கைகழுவும் வசதி அல்லது கிருமிநாசினி கண்டிப்பாக இருக்க வேண்டும். பூங்காவிற்கு வரும் அனைவரும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்பநிலையை சோதனை செய்ய வேண்டும்.  அனைவரும் கட்டயாம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். எச்சில் துப்ப தடை விதிக்கப்படுகிறது. பூங்காவில் 50 சதவீத நபர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும். பார்வையாளர்கள் தண்ணீர் கொண்டு வர வேண்டும். பூங்காவில் உள்ள கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். குழந்தைகள் விளையாட்டு பகுதி திறக்க தடை விதிக்கப்படுகிறது.


Tags : shopping malls , Security practice, starting today, shopping malls, opening
× RELATED பஸ்கள் மற்றும் ஷாப்பிங் மால்களை...