5 மாதங்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள், நூலகங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் திறப்பு : இயல்புநிலைக்கு தமிழகம் திரும்பியது!!

சென்னை : தமிழகத்தில் நான்காம் கட்ட தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்தன. அதன்படி, சென்னையில் 161 நாட்களுக்கு பிறகு சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும், அரசுப் பேருந்து சேவை வழிகாட்டு நடைமுறைகளுடன் அமலுக்கு வந்தது. மேலும் தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள், நூலகங்கள்  மற்றும் சிறிய பொழுது போக்கு பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல,பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க உள்ளன. தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதியும் இந்த தளர்வுகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐடி நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்படலாம் - ஓட்டல், ரிசார்ட், கேளிக்கை விடுதிகளுக்கு அனுமதி

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் ஐ.டி. நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்  என அறிவித்துள்ள தமிழக அரசு, இருப்பினும் தவிர்க்க இயலாத பணி தவிர பிற பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தவிர,  தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள், கிளப்களும் இன்று முதல் இயங்க உள்ளன.

தமிழகம் முழுவதும் இ-பாஸ் தேவையில்லை - கொடைக்கானல், ஏற்காடு செல்ல இ-பாஸ் தேவை

தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு செல்லும் வெளியூர் பயணிகளுக்கு இ-பாஸ் தேவை என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

வங்கிகள், அரசு அலுவகங்களில் 100% பணியாளர்கள் - கொரோனா தடுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும்

வங்கிகள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசு,  அரசு அலுவலகங்களும், இன்று முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என தெரிவித்துள்ளது. தனியார், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் கொரோனா தடுப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இனி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இல்லை - சினிமா படபிடிப்பிற்கு அனுமதி

இதுவரை ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த உத்தரவும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.  இதேபோல, சினிமா படபிடிப்பிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதே சமயம் 75 நபர்களுக்கு மேல் ஒரே நேரத்தில் பயன்படுத்த கூடாது, பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை போன்ற  நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் செப். 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் செப்டம்பர் 30-ம் தேதி நள்ளிரவு வரை, தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ள தமிழக அரசு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதன் படி, தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை - பிற மாநிலங்களில் இருந்து வந்தால் இ-பாஸ் கட்டாயம்

மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 நடைமுறை தொடர்கிறது. இதனால்,  பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவும் தொடர்கிறது. தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாநிலங்கள் , மாவட்டங்களில் இருந்து வருவோருக்கு, இ-பாஸ் அவசியம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வி சார் நிறுவனங்கள், திரையரங்குகளுக்கு தடை

பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் என அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கான தடையும் தொடர்கிறது. இதேபோல, திரையரங்குகள், நீச்சல் குளங்கள் கடற்கரை, உயிரியல் பூங்கா, அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

8 மணி வரை தரிசனம் - ஊர்வலங்களுக்கு தடை

மத, சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார விழாக்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>