×

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் நியமனத்தில் கட்சியினர் அதிருப்தி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.  இவ் ஒன்றியத்தில் திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் ஆகிய இரண்டு பேரூராட்சிகளும் மேலும் இது தவிர 54 கிராம ஊராட்சிகளும் ஒன்றியத்தில் அடங்கியுள்ளன. அதிமுகவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக  திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த எஸ்.ஆறுமுகம் ஒன்றிய செயலாளராக இருந்தார். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அதிமுக செயலாளராக ஆறுமுகம் நியமிக்கப்பட்டார். இவர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு இவருடன் இருந்த, வெங்கப்பாக்கத்தை சேர்ந்த விஜயரங்கன் என்பவரை ஒருங்கிணைந்த திருக்கழுக்குன்றம் ஒன்றிய அதிமுக செயலாளராக நியமித்தார்.

அதன் பிறகு நிர்வாக வசதிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளராக எஸ்.ஆறுமுகம் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஒருங்கிணைந்த  ஒன்றியமாக இருந்த திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தை 3 ஆக பிரித்து ஏற்கெனவே ஒன்றிய செயலாளராக இருந்த விஜயரங்கனை வடக்கு ஒன்றிய செயலாளராகவும், மாமல்லபுரத்தை சேர்ந்த ராகவன் என்பவரை கிழக்கு ஒன்றிய செயலாளராகவும், செல்வம் என்பவரை மேற்கு ஒன்றிய செயலாளராகவும் நியமித்துள்ளனர்.

இதில் விஜயரங்கன் கட்சியில் நீண்ட நாட்களாக இருப்பவர். மேலும் வெங்கப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராகவும், திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு துணை தலைவராகவும் இருந்ததால் கட்சியில் உள்ள அனைவருக்கும் பரிட்சயமானவர். கட்சியில் இவரை ஒன்றிய செயலாளராக நியமித்ததற்கு யாருக்கும் ஆட்சேபனை இல்லை. ஆனால் கிழக்கு ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மாமல்லபுரத்தை சேர்ந்த ராகவன் ஓரிரு ஆண்டுகளில் கட்சியில் களம் இறங்கியவர். அவருக்கு திடீரென ஒன்றிய செயலாளர் பதவி கொடுத்துள்ளனர்.இதுஅந்த பகுதியில்  மூத்த கட்சி உறுப்பினர்கள் பலருக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக புலம்புகின்றனர்.

இது ஒருபுறமிருக்க மேற்கு ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்ட செல்வம் ஒன்றியத்திற்கு அறவே அறிமுகமில்லாதவர். இவரது ஒன்றிய செயலாளர் நியமனம் என்பது சீனியர் கட்சிக்காரர்களிடையே பெரும் குமுறலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் சீனியர்கள் (அம்மா) ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படியெல்லாம் அறிவித்திருப்பாரா என்றும், தன்னிச்சையாக அவரவர்களுக்கு வேண்டப்பட்டவர்களை ஏனோ, தானோ என்று இப்படி அறிவித்ததால் இவர்கள் பின்னால் செல்வதற்கும், இவர்கள் சொல்லை கேட்பதற்கும் சீனியர் கட்சிக்காரர்கள் தயங்குகிறார்களாம். மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஒருங்கிணைந்த ஒன்றியமாக இருந்த ஒன்றியத்தை 3 ஆக பிரித்தது மட்டுமில்லாமல், கட்சியில் பழம் திண்ணு கொட்டை போட்டவர்களை, கட்சிக்காக அரும்பாடுபட்டவர்களை விட்டு விட்டு திடீரென முளைத்த ராகவன், செல்வம் ஆகியோர்களை ஒன்றிய செயலாளர்களாக நியமனம் செய்ததில் வருத்தத்தில் உள்ள சீனியர்  வரும் சட்ட மன்ற தேர்தலில் இதனுடைய தாக்கம் தெரியும் என்கின்றனர்.

* மூத்த உறுப்பினர்களுக்கு பதவி கிடைக்குமா?
திருக்கழுக்குன்றம் ஒன்றிய அதிமுகவில் சார்பு அணி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதிலாவது சீனியர், ஜூனியர் முறையை பின்பற்றியும், கட்சிக்கு உண்மையாக உழைத்தவன், ஆதாயத்திற்காக கட்சியில் இருப்பவர்கள் என்று தரம் பிரித்து பதவி வழங்கப்படுமா என்று கட்சியின் விசுவாசிகள் குழப்பத்திலும், எதிர்பார்ப்பிலும் உள்ளனராம்.

Tags : Parties ,secretaries ,AIADMK , Thirukkalukkunram Union, AIADMK secretaries, appointment, party dissatisfaction
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...