×

திடுக்கிடும் தகவல்கள் அம்பலம் கன்னட, மலையாள திரையுலகில் போதைப் பொருள் பழக்கம்? ஆதாரங்களை தந்த இயக்குநரால் பரபரப்பு

பெங்களூரு: கன்னடம் மற்றும் மலையாள திரையுலகினருக்கு போதை பொருள் உபயோகிக்கும் பழக்கம் இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘போதை பொருள் விற்பனை தொடர்பான 15 இளம் நடிகர்கள், நடிகைகள் குறித்த விவரங்கள் மற்றும் ஆதாரங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளேன்’ என்று கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் தெரிவித்துள்ளார். மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 29ம் தேதி பெங்களூருவில் நடத்திய அதிரடி சோதனையில், கன்னட டிவி நடிகை அனிகா மற்றும் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த முகமது அனூப்(39), பாலக்காட்டை சேர்ந்த ரவீந்திரன்(37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும் கன்னட மற்றும் மலையாள சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.

இந்நிலையில் கன்னட பத்திரிக்கையாளர் மற்றும் திரைப்பட இயக்குனருமான இந்திரஜித் லங்கேஷ், கன்னட திரையுலகில் போதை பொருள் பயன்படுத்துகின்றனர். அவர்கள் குறித்த விவரங்கள் எனக்கு தெரியும் என்று கூறினார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்திரஜித்திடம் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதன்படி நேற்று காலை 11.30 மணிக்கு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகினார். சுமார் 4.30 மணி நேரம் சி.சி.பி விசாரணை முடிந்து வெளியே வந்த அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘ கன்னட திரையுலகில் யார், யார் போதை பொருள் பயன்படுத்துகிறார்கள் என்ற விவரத்தை சி.சி.பியிடம் அளித்துள்ளேன். 15 பேர் குறித்த விவரங்கள் அடங்கிய அனைத்து ஆவணங்கள், ஆதாரங்களை வழங்கியிருக்கிறேன். அவர்களுக்கு எந்த அரசியல் பிரமுகர்கள் உதவுகிறார்கள் என்பதையும் கொடுத்துள்ளேன்’’ என்றார். இதற்கிடையே, போதைப் பொருள் விவகாரத்தில் கைதான முகமது அனூபுக்கும், திருவனந்தபுரம் தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரமீஸுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கேரள முக்கிய அரசியல் பிரமுகரின் நெருங்கிய உறவினருடனும் முகமது அனூபுக்கு தொடர்பு இருந்துள்ளது. முகமது அனூப் மற்றும் ரவீந்திரன் இருவரும் சேர்ந்து கேரளாவுக்கும் பெருமளவு போதைப்பொருட்களை கடத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு மலையாள சினிமாவை சேர்ந்த 8 இயக்குநர்களுடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் மூலம் மலையாள சினிமாவை சேர்ந்த பலருக்கும் போதைப்பொருட்கள் சப்ளை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த விவகாரம் கன்னட, மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* என்ஐஏ விசாரணை
தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய ரமீஸுடனும் முகமது அனூபுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால் தேசிய புலனாய்வு அமைப்பும் (என்ஐஏ) விசாரணையை தொடங்கி உள்ளது. முகமது அனூப்பின் செல்போனில் ரமீஸின் எண் இருந்தபோதும், கடந்த 3 மாதங்களாக இருவரும் தொடர்பு கொண்டு பேசவில்லை. ஆனால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தங்கம் அடங்கிய பார்சல் பிடிபட்ட ஜூன் 30ம் தேதி முதல் முகமது அனூப்பும், அரசியல் பிரமுகரின் உறவினரும் பலமுறை போனில் பேசியுள்ளனர். குறிப்பாக சொப்னா, சந்தீப் நாயர் இருவரும் பெங்களூருவில் இருந்த நாட்களில் இருவரும் பலமுறை பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை