×

வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேலில் இருந்து யுஏஇக்கு முதல் நேரடி விமான சேவை: அபுதாபி சென்றடைந்தது

ஜெருசலேம்: கடந்த 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்ட போது, மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இஸ்ரேலை ஒரு தனி நாடாக அவை ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தன. ஆனால்,1979ம் ஆண்டு எகிப்தும், 1994ம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. இதற்கிடையே வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சை (யுஏஇ) சமாதானப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா களமிறங்கியது. வளைகுடா நாடுகளில் ஆதிக்கம்  செலுத்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேலுடன் நெருக்கமானால் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை மீட்டெடுக்கலாம் என அமெரிக்கா நம்புகிறது. இந்த முயற்சி சமீபத்தில் வெற்றி கண்டது.

இஸ்ரேல்-அரபு அமீரகம் இடையே கடந்த 14 ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. மேலும், இஸ்ரேலை தனி நாடகவும் ஏற்றுக்கொண்டது. மேலும்,ராஜாங்க, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. அதன் ஒருபகுதியாக இஸ்ரேலை புறக்கணிக்கும் வகையில் இயற்றப்பட்டிருந்த சட்டத்தை யுஏஇ ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேல்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே வரலாற்றில் முதல் முறையாக  நேரடி விமான போக்குவரத்து நேற்று தொடங்கப்பட்டது.

இஸ்ரேலில் இருந்து பிரதமர் பெஞ்சமின் அரசின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் இஸ்ரேல் நாட்டுக்கு  சொந்தமான எல் அல் விமானத்தில் இந்த பயணத்தை தொடங்கினர். இந்த விமானம் சவுதி அரேபியாவின் வான்பரப்பு வழியாக ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியை வந்தடைந்தது. சவுதி அரேபியா வான்பரப்பு வழியாக பறக்க இஸ்ரேல் விமானத்திற்கு அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும். அபுதாபி வந்தடைந்த அதிகாரிகள், இதுபோன்ற நட்புறவை வளர்க்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர்.

Tags : time ,flight ,Abu Dhabi ,Israel ,UAE , For the first time in history, Israel, UAE, first direct, airline, Abu Dhabi
× RELATED 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது..!!