×

கோயில், சர்ச், மசூதி போன்ற வழிபாட்டுத்தலங்களில் பின்பற்ற வேண்டிய நடை முறைகள்: அரசு அறிவிப்பாணை வெளியீடு

சென்னை: வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள நடைமுறைகள் குறித்த அறிக்கை:
இந்து கோயில்கள்
* தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து வருபவர்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மற்றும் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு திருக்கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை.
*  65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோயாளிகள் கோயிலுக்கு வருகை புரிவதை தவிர்க்க கோயில் நிர்வாகம் அறிவுரை வழங்க வேண்டும்.
* எச்சில் துப்பக் கூடாது.
*  பக்தர்கள் கால்களை நீரில் சுத்தம் செய்து பின் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பு தான் கோயில் உள்ளே நுழைய வேண்டும்.
*  பஜனை குழு, பக்தி இசை குழு ஆகியவற்றை அனுமதிக்கக் கூடாது.
* அர்ச்சகர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களை தொட்டு குங்குமம், மஞ்சள், விபூதி, தீர்த்தம், பூ மற்றும் இதர பிரசாதங்கள் வழங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். விபூதி, குங்குமம் பாக்கெட்டுகளில் வழங்க வேண்டும்.
* உள்ளூர் பக்தர்களுக்கு தங்கும் விடுதிகள் மற்றும் அறைகள் தரக் கூடாது.
* கோயில்களில் திருமணங்கள் அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். ஒரு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் ஒரு திருமணம் என்ற முறையில் 50 நபர்களுக்கு மேற்படாமல் அனுமதித்து சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

  இஸ்லாமிய இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள்:
* மசூதிகளில் தண்ணீர் தொட்டிகளை பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
* மசூதிகளுக்கு தொழுகை செய்ய வருவோர், தங்களுடன் சொந்தமாக தொழுகை பாய்களை எடுத்து வந்த தொழுகை முடிந்தபின் எடுத்து செல்ல வேண்டும்.
* தொழுகை செய்வது நெருக்கமாக தோளோடு தோள்சேரும் வகையில் இருக்க கூடாது. ஒவ்வொருவருக்கும் இடையே 2 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
* கொரோனா தொற்று நீங்கி இயல்பு நிலை திரும்பும் வரை மசூதிக்குள் அல்லது மசூதி வளாகத்தில் மஹ்தாப், மதரசா அல்லது சமய வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதியில்லை.
* நிக்காஹ் என்னும் திருமண சடங்கின் போது, மசூதி வளாகத்துக்குள் 50 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதிக்க கூடாது.
* தர்காக்களை பொறுத்தவரையில் அதன் கதவுகள், ஜன்னல்கள் திறக்கப்பட்டு அதில் 2 மீட்டர் இடைவெளி விட்டு ரிப்பன் கட்டி பக்தர்கள் உள்ளே செல்லாமல் தடுப்பு அமைக்க வேண்டும்.
* ரிப்பனுக்கு வெளியில் தான் உண்டியல் போன்றவை வைக்க வேண்டும். கொடிக்கம்பங்களுக்கு அனுமதி இல்லை.

கிறித்தவ சமய இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள்
* உடல் தூய்மை சார்ந்த உடல் கழுவுதல் போன்றவை சர்ச்சுக்கு பதிலாக வீடுகளில் செய்ய வேண்டும்.
* சர்ச்சில் உள்ள மணி உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் தொடக்கூடாது.
* சமயம் சார்ந்த அல்லது பாசுரங்கள் அச்சிட்ட புத்தகங்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. இசைத்தல் அல்லது பாடுவதற்கு பதிலாக ஒலி நாடாக்கள் பயன்படுத்தலாம்.
* ஏசுநாதரின் இறுதி விருந்து சடங்கு மற்றும் புனித நீர் தெளித்தல் உள்ளிட்ட சமய சடங்குகள் கொரோனா தொற்று தடுப்பு காரணமாக தவிர்க்கப்பட வேண்டும்.
* சர்ச் வளாகத்துக்குள் திருமண நிகழ்வுகள் நடத்தும்போது 50 பேருக்கு மிகாமல் சமக இடைவெளியுடன் பங்கேற்க வேண்டும்.
இதுபோல் சீக்கிய மதத்தினர், புத்த விகாரங்கள் மறறும் ஜெயின், பார்சி இடங்கள் மற்றும் இதர வழிபாட்டு குழுவினருக்கான பாதுகாப்பு நடைமுறைகளையும் அரசு அறிவித்துள்ளது.


Tags : places ,temples ,churches , Temple, Church, Mosque, Shrine, Methods to be followed, Government Notice, Publication
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்