×

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு 118 புதிய வாகனங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்: 13 மருத்துவமனைகளுக்கு மத்தியஅரசு தர சான்றிதழ்

சென்னை: 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு 118 புதிய அவசர வாகனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். மேலும் சிறப்பாக செயல்பட்ட மருத்துவமனைகளுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட தரச் சான்றிதழ்களை வழங்கினார். தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் கீழ் மொத்தம் 1005 அவசர கால வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 65 பச்சிளம் குழந்தைகளுக்கான வாகனங்களும், 871 அடிப்படை அவசர கால மற்றும் மலையோரப் பகுதிகளுக்கான வாகனங்களும், 65 மேம்பட்ட அவசர கால வாகனங்களும், 41 இருசக்கர வாகன வாகனங்களும் இயங்கி வருகின்றன.  

கொரோனா தொற்று தடுப்பு பணியிலும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு ரூ.125 கோடி செலவில் 500 புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் முதல்வர் அறிவித்தார். இதன்படி தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு ரூ.103 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக, ரூ.20.65 கோடி மதிப்பீட்டில், 90 அவசரகால வாகனங்கள், ₹3.9 கோடி செலவில் அதிநவீன குளிர்சாதன வசதியுடன் கூடிய 10 ரத்த தான வாகனங்கள், தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட 18 அவசரகால வாகனங்கள் உள்ளிட்ட 118 ஆம்புலன்ஸ் வானங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ேநற்று தலைமை செயலகத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் காலியாக உள்ள 138 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட பணி ஆணைகளையும் வழங்கினார். இதுதவிர தேசிய தர உறுதித் திட்டத்தின் கீழ் தேசிய தரச் சான்றிதழ் மற்றும் மத்திய அரசின் பரிசுத் தொகையை வென்ற 13 அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர்களிடம் தரம் சான்றிதழ் மற்றும் ரூ.2.53 கோடி பரிசுத் தொகையும் முதல்வர் வழங்கினார். நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் அஜய் யாதவ், மாநில நலவாழ்வு குழும இயக்குநர் செந்தில் ராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் செல்வ விநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் குருநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

* முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி
முதல்வர் எடப்பாடி நேற்று துவக்கி வைத்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஒரு வாகனத்தை பெண் ஓட்டுநர் வீரலட்சுமி இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து, தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தேனி மாவட்டத்தை சேர்ந்த வீரலட்சுமி 4 ஆண்டுகளாக ஓட்டுநர் பயிற்சி பெற்று தனியார் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இதனை தொடர்ந்து, கொரோனா காலத்தில் சமூகத்திற்கு ஏதேனும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கடந்த ஒரு மாதமாக ஆம்புலன்ஸ் ஓட்டும் பயிற்சியை பெற்றுவந்தார். தொடர்ந்து, நேற்று முதல் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக தனது பணியை தொடங்கியுள்ளார்.

Tags : hospitals ,CM , 108 Ambulance Service, 118 New Vehicles, Chief, Launched, 13 Hospitals, Federal Quality Certification
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் அதிநவீன...