×

வெளிநாட்டில் இருந்து மீட்பு விமானத்தில் வந்தாலும் பிற மாநிலங்களில் இறங்கி சென்னை வரும் பயணிகள்: 20 நாட்களுக்கு மேலாக தொடர்கிறது

சென்னை: வெளிநாடுகளில் இருந்து மீட்பு விமானத்தில் வரும் பயணிகள் சுகாதாரத்துறை அதிகாரிகளின் குளறுபடி காரணமாக இந்தியாவில் பிற மாநிலங்களில் இறங்கி சென்னை வருகின்றனர். அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து 50, அபுதாபியிலிருந்து 23, குவைத்திலிருந்து 196 இந்தியர்கள் என மொத்தம் 269 பேர் மீட்கப்பட்டு 3 சிறப்பு மீட்பு விமானங்களிலிருந்து நேற்று முன்தினம் இரவிலிருந்து நேற்று அதிகாலை வரை சென்னை அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் மருத்துவம், குடியுரிமை, சுங்கச் சோதனைகள் முடித்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் அரசின் இலவச தங்குமிடங்களுக்கு 173 பேரும், கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஓட்டல்களுக்கு 90 பேரும், அரசின் சிறப்பு அனுமதி பெற்று வீடுகளில் தனிமைப்படுத்த 6 பேரும் அனுப்பிவைக்கப்பட்டனர்.

சிகாகோ நகரிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த 123 இந்தியர்களில் 50 பேர் மட்டுமே சென்னை வந்தனர். மற்றவர்கள் டெல்லியில் இறங்கி விட்டனர். அதேபோல் குவைத்திலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த 177 பேரில் 23 பேர் மட்டுமே சென்னை வந்தனர். மற்றவர்கள் விஜயவாடாவில் இறங்கி விட்டனர். மத்திய அரசின் தளர்வுகளுடன் கூடிய தனிமைப்படுத்துதல் விதிமுறையை மற்ற மாநில சுகாதாரத்துறையினர் கடைபிடிக்கின்றனர். ஆனால், தமிழக அரசின் சுகாதாரத்துறை அதை கடைபிடிக்காமல் பழைய முறையையே செயல்படுத்துகிறது. எனவே தமிழகம் வரும் பயணிகள், வழியில் மற்ற மாநிலங்களில் இறங்கி அங்கிருந்து உள்நாட்டு விமானங்களில் சென்னை வருகின்றனர். தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் குளறுபடி காரணமாக கடந்த 20 நாட்களுக்கு மேலாகவே வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் விஜயவாடா, ஐதராபாத், டெல்லி, பெங்களூரு, கொச்சி, புவனேஸ்வர் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலங்களில் இறங்கி சென்னை வரும் நிலையே தொடர்கிறது.

Tags : Passengers ,states ,rescue flight ,Chennai , Abroad, the rescue flight, landing in other states, Chennai passengers, more than 20 days, continues
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...