×

இந்திய ராணுவம் முறியடித்தது லடாக்கில் சீனா மீண்டும் அத்துமீறல்: இரு தரப்பும் படைகளை குவிப்பதால் பதற்றம்

புதுடெல்லி: கிழக்கு லடாக் எல்லையில், பாங்காக் சோ ஏரி பகுதியில் சீனப் படையினர் கடந்த 29ம் தேதி இரவு மீண்டும் அத்துமீறி நுழைய முயன்றதாகவும், அந்த முயற்சியை முறியடித்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஜூன் 15ம் தேதி அத்துமீறி ஊடுருவிய சீனப் படையினர் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி தாக்குதலில் சீனா தரப்பில் 35 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானாலும் இதுவரையிலும், சீனா அதனை ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் போர் பதற்றம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, இருநாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் தலைமையில் 5 கட்டப் பேச்சு நடந்தது. இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின், ஜூலை 6ம் தேதிக்கு பிறகு இரு படைகளும் எல்லையில் இருந்து வாபஸ் பெற தொடங்கின. இருப்பினும், சீனா தனது ராணுவத்தை முழுமையாக அங்கிருந்து வாபஸ் பெறவில்லை என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கிழக்கு லடாக் பகுதியில்  ஏற்கனவே செய்துள்ள ஒப்பந்தங்களை மீறும் வகையில், கடந்த 29, 30ம் தேதிகளில் ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைகளில் சீனப் படையினர் ஈடுபட்டதாகவும் அதனை இந்திய ராணுவத்தினர் முறியடித்துள்ளதாகவும் ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் அமன் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பாங்காக் சோ ஏரியின் தென்கரையில் ஏற்கனவே பிரச்னை நீடித்து வரும் நிலையில், ஏரியின் வடகரையில் கடந்த 29, 30ம் தேதி இரவு அத்துமீறி ஊடுருவிய சீனப் படையினர் ஏற்கனவே இருக்கும் நிலைகளை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ள நிலையில், அதனை சீர்குலைக்கும் வகையில், சீன ராணுவம் ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனை முறியடித்த இந்திய ராணுவம் தனது நிலைகளை வலுப்படுத்தி வருகிறது. பேச்சுவார்த்தையின் மூலம் எல்லையில் அமைதியை பராமரிக்க விரும்பும் இந்தியா தனது எல்லைகளை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது.

தற்போதைய மோதலுக்கு தீர்வு காணும் வகையில், இந்தியாவின் எல்லைக்குட்பட்ட சுசூல் பகுதியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, எல்லையை ஒட்டிய விமானப்படை தளங்களில், இந்திய விமானப்படை போர் விமானங்களையும், தாக்குதல் நடத்தும் ஹெலிகாப்டர்களையும் குவித்து வருகிறது. அதே போல, லடாக் எல்லையையொட்டிய ஹோடன், கர் குன்சா விமானப்படை தளங்களில் சீனாவும் ஜே-20 ரக போர் விமானங்களை நிறுத்தி உள்ளது. இதுதவிர கைலாஷ், மானசரோவரில் உள்ள ஏரி அருகே சீனா ஏவுகணை தளம் ஒன்றையும் அமைத்து வருகிறது. இதனால் எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

*b கோபத்தை காட்றது எப்போ?
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தனது டிவிட்டரில், ``பாங்காக் சோ ஏரியில் சீன ராணுவம் ஊடுருவ முயற்சித்திருப்பது வெட்க கேடானது. பாங்காக் சோ ஏரி, கோக்ரா, கல்வான் பள்ளத்தாக்கு, டெப்சாங், லிபு லேக், டோகா லா, நாகு லா கணவாய் பகுதிகளில் ஒவ்வொரு நாளும் சீன ராணுவம் ஊடுருவுகிறது. மோடி ஜி, எப்போது கோபத்தை வெளிப்படுத்துவார்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

* பாஜ பதிலடி
காங்கிரசுக்கு பதிலடி கொடுத்து பாஜ ஊடக தொடர்பாளர் சம்பிட் பத்ரா வெளியிட்ட டிவிட்டரில், ``இந்திய ராணுவம் தனது கோபத்தை காட்டியுள்ளது. ராணுவம், மோடி மீது ஒவ்வொருவரும் நம்பிக்கை வைத்துள்ளனர். அரசும் ராணுவமும் இருக்கும் வரை, நாட்டின் இறையாண்மையுடன் யாரும் விளையாட முடியாது்,’’ என்று கூறியுள்ளார்.

Tags : Chinese ,Ladakh ,Indian Army ,sides ,China , Indian Army, Defeated, Ladakh, China, Encroachment, Troops, Concentration Tension
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...