×

வீடு வீடாக சென்று ஆசிரியர்கள் ஆய்வு செய்ததில் படிப்பை பாதியில் நிறுத்திய 300 பேர் மீண்டும் சேர்ப்பு: மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை 22 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்தனர்

சென்னை: சென்னையில் வீடு வீடாக சென்று ஆசிரியர்கள் ஆய்வு செய்ததில் படிப்பை நிறுத்திய 300 மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் வேறு பள்ளிகளில் படித்த 4 ஆயிரம் பேர் புதிதாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 281 பள்ளிகள் உள்ளன. இவற்றில் தற்போது 80 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தலின் பேரில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் ஆசியர்கள் அடங்கிய குழு அமைத்து இணை ஆணையர் சங்கர்லால் குமாவத் உத்தரவிட்டார். இதன்படி சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் சென்னை முழுவதும் 1.60 லட்சம் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதில், 300 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியது தெரியவந்தது. அவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்படி 1 முதல் 6 வகுப்பு வரை 60 பேர், 6 முதல் 8 வகுப்பு வரை 45 பேர், 9 முதல் 10 வகுப்பு வரை 90 பேர், 11 மற்றும் 12ம் வகுப்பில் 85 பேர் என்று மொத்தம் இதுவரை 300 பேர் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது வரை 22 ஆயிரம் மாணவர்கள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதில் குறிப்பாக 4 ஆயிரம் மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் படிக்காத மாணவர்கள் ஆகும். அதாவது வேறு அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 4 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளர் என்று குறிப்பிடத்தக்கது.

Tags : teachers ,inspection ,corporation schools ,school , House-to-house, teachers study, study half, 300 dropouts, re-enrollment, corporation school, 22 thousand students so far, enrolled
× RELATED 128 மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை