×

கோவாவில் இருந்து கடத்தி வந்து விற்ற ரூ.50 ஆயிரம் போதைப்பொருள் பறிமுதல்: 2 பேர் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பு பேசின்பிரிட்ஜ் ஆகிய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது, புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பீடா கடையில் கிறிஸ்டல் மெத்தனால் என்னும் போதைப்பொருள் பதுக்கி விற்பது தெரியவந்தது. அங்கிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர் புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் (30) என்பதும், திருவல்லிக்கேணியை சேர்ந்த முகமது ரபிக் (34) என்பவரிடமிருந்து இந்த போதைப் பொருளை வாங்கி விற்பனை செய்ததும் தெரிந்தது.  

இதையடுத்து, இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் என்று கூறப்படுகிறது. இந்த போதைப் பொருளை சிகரெட் மூலம் பயன்படுத்தினால் 36 மணி நேரம் வரை போதை இருக்கும் என்று கூறப்படுகிறது. முகமது ரபிக் இந்த போதைப் பொருளை கோவாவில் இருந்து கடத்தி வந்து, சென்னையில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. ஒரு கிலோ போதைப் பொருளை ரூ.1.5 லட்சத்திற்கு வாங்கி வந்து, சென்னையில் ரூ.3 லட்சம் வரை விற்றுள்ளார். இந்த போதைப் பொருள் கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Goa , Goa, kidnapping, selling, Rs 50,000, drugs, seizure, 2 arrested
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...