×

இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் இடையே முதல் நேரடி விமான சேவை இன்று தொடக்கம்

அபுதாபி: இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இடையே முதல் நேரடி விமான சேவை இன்று தொடங்கியது. இஸ்ரேல் நாட்டை அரபு நாடுகள் நீண்ட காலமாக தனிநாடாக ஏற்காமல் இருந்து வந்தன. பாலஸ்தீனம், எகிப்து, ஜோர்டான், லெபனான், ஈராக் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுடனான உறவை துண்டித்து கொண்டன. அந்நாட்டுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்து வந்தன. காலப் போக்கில் இஸ்ரேல் நாட்டுடன் மற்ற நாடுகள் நட்புறவு பாராட்டினாலும் ஐக்கிய அரபு அமீரகம் மட்டும் விரோதத்தைக் கடைபிடித்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில்தான் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

சர்வதேச அளவில் இந்த ஒன்றிணைவு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகப் பேசப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவு ஏற்பட்டுள்ளதால் தொலைத் தொடர்பு, சுற்றுலா, விமானச் சேவை, பாதுகாப்பு, தொழில்நுட்பம், மின் சக்தி, சுகாதாரம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படும் சூழல் உருவாகியுள்ளது. இது சர்வதேசப் பொருளாதாரத்துக்கும் உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே இன்று நேரடி விமான சேவை தொடங்கியுள்ளது. இந்த விமான சேவைக்கு சவுதி அரேபிய அரசு தனது நாட்டு வான்வெளியில் பறந்து செல்ல அனுமதி வழங்கியுள்ளது. சவுதி வரலாற்றில் இஸ்ரேல் விமானம் தங்களது நாட்டு வான்வெளியில் பறந்து செல்ல அனுமதி வழங்கியது இதுவே முதல் முறை. அபுதாபி - டெல் அவிவ் இடையே நேரடி விமானச் சேவை இன்று தொடங்கியது. பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எல் அல் (ஃபிளைட் 971) விமானம் புறப்பட்டுச் சென்றது. இன்று மதியம் அபுதாபி சென்றடைந்த இந்த விமானம் நாளை இங்கிருந்து டெல் அவிவ்விற்குப் புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.



Tags : Israel ,flight ,United Arab Emirates ,Airlines , Israel, United Arab Emirates, Airlines
× RELATED இஸ்ரேல் ஏற்படுத்திய பேரழிவுக்கு...