×

டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

டெல்லி: டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84. கொரோனா பாதிப்பால் பிரணாப் முகர்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் மிராடி கிராமத்தில் டிசம்பர் 11ம் தேதி 1935ல் பிறந்தார்.

சுதந்திர போராட்ட வீரர் கின்கர் முகர்ஜிக்கு மகனாக பிறந்தவர் பிரணாப் முகர்ஜி. பிரணாப் முகர்ஜி 40 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 5 முறை மாநிலங்களவை உறுப்பினர், 2 முறை மக்களவை உறுப்பினராக பதவி வகித்தவர். 1969ம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு தேர்வானார். நிதி, ராணுவம், வெளியுறவுத்துறை உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தவர். 2012 முதல் 2017 வரை குடியரசு தலைவராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி.

2019ம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றவர். பிரணாப் முகர்ஜி 40 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். பல தலைமுறை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குருவாக திகழ்ந்தவர் பிரணாப் முகர்ஜி. நாடாளுமன்ற அரசியலின் நடைமுறைகள் குறித்து பிரணாப்பிடம் பாடம் கற்ற எம்.பி.க்கள் ஏராளம். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சட்டம் பயின்றவர் பிரணாப் முகர்ஜி.

கலைஞருடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்தவர் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி. ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டபோது கலைஞரை சந்தித்து திமுக ஆதரவை கோரினார் பிரணாப். முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுடன் ஒரு சகாப்தம் நிறைவடைந்தது என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நாடு தனது மிக சிறந்த குடிமகன் ஒருவரை இழந்துவிட்டது என்று ராம்நாத் கோவிந்த் உருக்கமாக கூறியுள்ளார்.



Tags : Pranab Mukherjee ,Delhi Army Hospital , Former President, Pranab Mukherjee
× RELATED இப்போது இருந்தால்...