×

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்..: மெக்சிகோவை பின்னுக்கு தள்ளி 3வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா!

புதுடெல்லி: கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் மெக்சிகோவை முந்தி இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  நாட்டில் கடந்த 5 நாட்களாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தினமும் 75,000க்கும் அதிகமாக இருந்து வருகிறது. இதுவரை இந்த எண்ணிக்கை வேறு எந்த நாட்டிலும் காணப்படவில்லை. இன்னும் சில நாட்களில் நாட்டில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 10 லட்சத்தை கடக்கும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய அளவில் தொற்று அதிகரிப்பு உண்மையாக இருந்தாலும், நடப்பு மாதத்தின் துவக்கத்தில் இருந்து தொற்று எண்ணிக்கை விகிதாச்சார அடிப்படையில் குறைந்து வருகிறது. துவக்கத்தில் இருந்து கொரோனா தொற்று அதிகரித்து வந்த மாநிலங்களில் டெல்லியைத் தவிர மற்ற மாநிலங்களில் தொற்று அதிகரித்து காணப்படுகிறது. மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேசிய அளவைவிட தொற்று அதிகமாக இருக்கிறது.

வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு  இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 78,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 36.21 லட்சம் பேர் இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 27.74 லட்சம் பேர் அல்லது 76 சதவீதம் பேர் மீண்டு வந்துள்ளனர். மேலும் 971 பேர் கொரோனாவுக்கு பலியானதை தொடர்ந்து உலகில் இறப்பு எண்ணிக்கையில் 3வது இடத்திற்கு இந்தியா சென்று விட்டது. மெக்சிகோவில் 64,158 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியாவில் பலி எண்ணிக்கை 64,646 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி கொரோனா இறப்பு எண்ணிக்கையில் மெக்சிகோவை பின்னுக்கு தள்ளி இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த வேகத்தில் இந்தியாவில் கொரோனா பரவினால், இன்னும் ஒரு வாரத்தில் பிரேசிலையும், ஒரு மாதத்தில் அமெரிக்காவையும் முந்திச்சென்று கொரோனாவில் உலகின் முதல் இடத்தை இந்தியா பிடித்து விடும் என அஞ்சப்படுகிறது.
 

Tags : corona deaths ,India ,Mexico , Corona, fatality, Mexico, India
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!