×

50% பயணிகளுடன் பேருந்து இயங்கினாலும் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை: சென்னை போக்குவரத்து கழகம் தகவல்

* பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம்
* இருவர் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர அனுமதி


சென்னை: 50% பயணிகளுடன் பேருந்து இயங்கினாலும் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று சென்னை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இரண்டு பேர் அமரும் இருக்கைகளில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பின்பக்க வாயில் வழியாக ஏறும் போது கிருமி நாசினி வழங்கப்படும் எனவும், பின்னர் பயணம் முடியும் போது முன்பக்க வாயில் வழி பயணிகள் இறங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. பேருந்துகள் ஒவ்வொரு நடை இறுதியில் கிருமி நாசினி கொண்டு பேருந்து முழுவதுமாக சுத்தப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக  கடந்த 5 மாதங்களாக பொதுப்போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் மாவட்டங்களுக்குள்ளான அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதியளித்தது.

நாளை முதல் சென்னையில் பேருந்துகள் இயக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் போக்குவரத்து கழகம் செய்து வருகிறது. நாளை 100% போக்குவரத்து ஊழியர்களுடன் 3 ஆயிரம் பேருந்துகள் வரை இயக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும், மக்கள் கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. பேருந்து கட்டணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை எனவும் பேருந்துகளில் பாஸ் பெற்று அளவில்லா பயணம் மேற்கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும், கிருமிநாசினி பயன்படுத்துதல், ஏறும், இறங்கும் வழியை சரியாக பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Tags : passengers ,Chennai Transport Corporation , No change ,fare even,bus is running, 50% passengers, Chennai Transport Corporation information
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணம்