குலசேகரன்பட்டினம் கடற்கரையில் உடைக்கப்பட்ட சாலையால் கடல்நீர் ஊருக்குள் புகும் அபாயம்: சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

உடன்குடி: குலசேகரன்பட்டினத்தில் மழை நீரை அகற்ற மர்ம நபர்கள் உடைத்தெறிந்த சாலை ஓராண்டாகியும் சீரமைக்கப்படாமல் இருப்பதால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது.  குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையையொட்டி தசரா திருவிழா காலங்களில் பக்தர்கள் சிரமமின்றி சூரசம்காரத்தை காண்பதற்காக நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் சுமார் ரூ40லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டது. அந்தச்சாலையை திருவிழா காலங்கள் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் பொதுமக்கள், பக்தர்கள் கடற்கரைக்கு வந்து செல்ல பயன்படுத்தி வந்தனர்.  இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. அப்போது கடற்கரை பகுதிக்கு சென்ற மர்ம நபர்கள் சிலர் அந்த சாலையை உடைத்து தேங்கி கிடந்த மழை நீரை கடலில் கலக்க விட்டனர்.

இதனையடுத்து வேகமாக சென்ற வெள்ளநீரினால் சாலை பெருமளவில் அரித்துச் சென்றது. இதன் காரணமாக அந்த சாலையை பயன்படுத்த முடியவில்லை. மேலும் தற்போது கடலில் நிகழும் சில மாற்றத்தின் காரணமாக அவ்வப்போது பெரிய அளவில் அலைகள் அடிக்கிறது. அமாவாசை, பவுர்ணமியின் போது கடலில் அலையின் வேகம் அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் கடல் நீர் உடைத்து விடப்பட்ட சாலை வழியே செல்கிறது. இதன் காரணமாக காமராஜர் நகர், பெருமாள்கோயில் தெரு ஆகிய பகுதிகளுக்கு கடல் நீர் உட்புகும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைத்து கடல் நீர் ஊருக்குள் உட்புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>