×

கிருஷ்ணகிரி அருகே 5 ஆயிரம் ஆண்டு பழமையான செங்காவி ஓவியம் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிக பழமையான செங்காவி ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அருகே உள்ள வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆறுமுகசுப்பிரமணி மற்றும் ஊர்மக்கள் அளித்த தகவலின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி ஆகியோர், பிரமாண்டமான செங்காவி மயில் ஓவியம் உள்ளடங்கிய ஓவியப் தொகுப்பை கண்டறிந்துள்ளனர். இந்த செங்காவி ஓவியம் குறித்து காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: கிருஷ்ணகிரி அருகே படேதலாவ் ஏரியின் வலதுபுற கோடியில் அமைந்துள்ள காலபைரவர் கோயில் செல்லும் பாதையில், ஆஞ்சநேயர் கோயில் மலையின் உச்சிப்பகுதியில் பாறை ஓவியத் தொகுப்பு கண்டறியப்பட்டுள்ளது. இங்குள்ள செஞ்சாந்து ஓவியம் புதிய கற்கால கலாச்சாரங்களை கொண்டதாக உள்ளது.

செத்தவரை என்ற இடத்தில் உள்ள ஓவியம் போல இதுவும் முக்கியமானதாக, அதில் 9 அடி நீளமுள்ள மயில், பாய்ந்து வரும் மாடு, உடும்பு, கழுதைப்புலி மிகச்சிறப்பாக உள்ளது. அத்துடன் கொக்கு, குரங்கு, மான் போன்ற விலங்குகள், புதிய கற்காலம் தொடங்கி, பெருங்கற்காலம் வரை பிற்காலத்தில் மக்களின் முக்கிய வாழ்விடமாக இருந்திருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. இதில் உள்ள கழுதைப்புலி உருவம், அலங்காரத்துடன் காணப்படுவதால் இது ஒரு கற்பனை உருவமாய் இருக்கலாம். இத்தகைய கற்பனை உருவங்கள் சிந்து சமவெளி முத்திரைகளிலும் காணப்படுகிறது. இந்த ஓவியத் தொகுப்பு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, தமிழகத்திலேயே பெரிய மயில் ஓவியம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார். வரலாற்று ஆய்வாளர் கிருஷ்ணகுமார் கூறுகையில், ‘இம்மலையில் 2 ஆயிரம் ஆண்டுகளாக குரங்குகள் வசித்ததால், மலை உச்சியில் வெண்சாந்திலான குரங்கின் உருவமும், மலை அடிவாரத்தில் உள்ள ஏரியில், அந்த ஓவியன் பார்த்த மான் மற்றும் கொக்கின் உருவத்தையும் அழகாக வரைந்துள்ளனர். இவை வாழ்வியலுடன் தொடர்புடையது.

இதுவரை தமிழ்நாட்டில் கண்டறியப்படாத 9 அடி நீளமுடைய செங்காவிய ஓவியமாக, மயில் தோகை அழகாக தெரியும் வண்ணம் வரையப்பட்டுள்ளது. இது செங்காவி நிறத்தில் வரையப்பட்ட பறவை ஓவியங்களில், இந்தியாவிலேயே பெரியதாக இருக்கக்கூடும். மேலும் ஒரு புலியின் உருவமும் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத் தொகுப்பு பற்றிய ஆய்வு தேவை,’ என்றார். இந்த ஆய்வில் வரலாற்று ஆய்வாளர்கள் விஜயகுமார், ரவி மற்றும் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.


Tags : Krishnagiri ,Chengavi , Discovery ,a 5,000 year old Chengavi painting, Krishnagiri
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்