×

நீதிமன்ற உத்தரவை மீறி பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட வழக்கு: விஜய் மல்லையாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

புதுடெல்லி: நீதிமன்ற உத்தரவை மீறி பணப்பரிவர்த்தனை செய்த வழக்கில் விஜய் மல்லையாவின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்திய வங்கிகளிடம் ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா, அதைத் திரும்பச் செலுத்தாமல் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டை விட்டே தப்பியோடிவிட்டார். பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கி வந்த கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரான இவர் மீது நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது லண்டனில் இருக்கும் இவரை நாடு கடத்துவது தொடர்பாகவும் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.  இதற்கிடையில் நீதிமன்ற உத்தரவை மீறி தனது பிள்ளைகளின் வங்கிக் கணக்கிற்கு 40 மில்லியன் டாலர் பணத்தை மாற்றிவிட்டதாக வங்கிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதுபோல பணப்பரிமாற்றம் செய்யக்கூடாது என ஏற்கனவே கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவை மல்லையா மீறிவிட்டதாக அதில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2017ம் ஆண்டு மே மாதம் தீர்ப்பளித்தது. அப்போது, மல்லையா குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி விஜய் மல்லையா தரப்பில் சீராய்வு மனு  தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, நீதிமன்ற உத்தரவை மீறி பணப்பரிவர்த்தனை செய்த வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என அறிவித்த முந்தைய தீர்ப்பு செல்லும் என நீதிபதிகள் அறிவித்தனர். அத்துடன் விஜய் மல்லையாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



Tags : Vijay Mallya ,Supreme Court Supreme Court , Money Laundering, Vijay Mallya, Review Petition, Supreme Court
× RELATED வங்கி மோசடியாளர்களுடன் மோடி...