இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது ஏன்?: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய விளக்கம்..!!

டெல்லி: பரிசோதனை அதிகரிப்பு, ஊரடங்கு தளர்வு, மக்களின் மெத்தன போக்கு ஆகியவையே இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்க காரணம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கமளித்துள்ளது. தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இன்னும் 6 வாரங்களில் அமெரிக்காவை விஞ்சி உலகளவில் இந்தியா முதலிடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 36 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.64,469 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 நாட்களாக தினமும் 70 ஆயிரத்திற்கும் அதிகமான புறநோயாளிகளுக்கு தொற்று உறுதியாகி வருகிறது.

இந்த நிலையே நீடித்தால் அடுத்த 6 வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் பிரேசில் மற்றும் அமெரிக்காவை முந்தி இந்தியா முதலிடத்தை பிடித்துவிடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து டெல்லி மருத்துவர் தெரிவித்ததாவது, ஒரே நாளில் அதிக தொற்று  பதிவாகி இருக்கும் நாடாக இந்தியா உருவாகி வருகிறது. இதற்கு காரணம் கிராமப்புறங்களில் கிருமி பரவல் அதிகரித்து வருவதுதான்.

குறிப்பாக 7 மாநிலங்களில் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. 75 சதவீதம் தொற்றுக்கு இந்த மாநிலங்களே காரணம் என குறிப்பிட்டார். பரிசோதனை அதிகரிப்பு, ஊரடங்கு தளர்வு, மக்களின் மெத்தன போக்கு ஆகியவையே தொற்றின் வேகம் அதிகரிக்க காரணம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறி கொண்டவர்களால் கொரோனா அதிகமாக பரவுவதாகவும் அந்த அமைப்பு விளக்கமளித்துள்ளது.

Related Stories:

>