×

திருப்போரூரில் குண்டு வெடித்து 2 பேர் படுகாயம் கேளம்பாக்கம் வீட்டில் மேலும் 3 குண்டுகள்

* வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
* குண்டுகளை செயலிழக்க போலீசார் முடிவு
* பொதுமக்கள் அச்சம்

திருப்போரூர்: கடந்த 28ம் தேதி இரவு 7 மணி அளவில் திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தங்களுடன் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பலத்த காயமடைந்தனர். போலீஸ் விசாரணையில் இருவரும் செங்கல்பட்டை சேர்ந்த பழைய குற்றவாளிகளான செங்கல்பட்டு ரேடியோமலை, நாவலர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் அசோக் (30) என்பதும், வல்லம் கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்த விக்கி என்கிற வினோத்குமார் (30) என்பதும் தெரியவந்தது.

செங்கல்பட்டைச் சேர்ந்த பிரபல ரவுடி சீனு என்கிற குள்ளசீனு என்பவனை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கும்பல் வெட்டிக் கொன்றது. இதில் அசோக்குமார் இரண்டாவது குற்றவாளி ஆவான். இதனால் இவனைக் கொல்ல குள்ள சீனு கோஷ்டி காத்திருந்தது. இவர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அசோக்குமார் தனது மனைவியுடன் கேளம்பாக்கம் ஜோதி நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளான். இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்த விக்கி என்கிற வினோத்குமார் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளான். அசோக் குமாருக்கு செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மருத்துவமனையில் அசோக்குமார் கொடுத்த வாக்குமூலத்தில் கேளம்பாக்கம் ஜோதி நகர் வீட்டிலும் 3 வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறினார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து கேளம்பாக்கம் ஜோதி நகர் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த வீட்டிற்கு யாரேனும் வருகிறார்களா என்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஜோதி நகர் பகுதியில் உள்ள வீட்டில் வெடிகுண்டுகள் இருப்பதால் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று இன்று காலை வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் வீட்டைத் திறந்து வெடிகுண்டுகளை எடுத்துச் சென்று செயலிழக்கச் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

வெடிகுண்டுகள் இருப்பதாக வந்த தகவலையடுத்து ஜோதி நகர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டதால் அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்புவாசிகள் பெரும் பீதிக்குள்ளாகினர். வெடிகுண்டு வெடித்தால் பலத்த சேதம் ஏற்படலாம் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர். வீட்டிற்குள் யாரும் செல்லாதவாறு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், அதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், பாதுகாப்பான முறையில் வெடிகுண்டுகள் அகற்றப்படும் என்றும் போலீசார் பொதுமக்களிடம் எடுத்துக் கூறினர்.

* குற்றவாளிகளின் புகலிடம் கேளம்பாக்கம்
சென்னைப் புறநகர் பகுதியான கேளம்பாக்கம் மற்றும் தையூர் பகுதிகளில் ஏராளமான புதிய வீட்டுமனைப்பிரிவுகள் உருவாகி உள்ளன. இவற்றில் முழுமையாக வீடுகள் கட்டப்படவில்லை. தனித்தனி வீடுகள் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதி தேடப்படும் குற்றவாளிகள் பலரும் இப்பகுதியில் வீடுகளை வாடகைக்கு எடுத்து கேளம்பாக்கத்தில் முகாமிடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டைச் சேர்ந்த அண்மையில் இறந்துபோன பிரபல ரவுடி வல்லம் பூபதி கேளம்பாக்கம் ஜோதி நகரில் வாடகை வீட்டில் தங்கி இருந்தான்.

அதேபோன்று தண்டையார் பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி ரவிச்சந்திரன் திருப்போரூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டான். முழுமையான தகவல்களை பெறாமலும், ஆதார் அட்டை  உள்ளிட்ட முகவரி குறித்த சரியான அடையாளங்களைப் பெறாமல் வாடகைக்கு ஆசைப்பட்டு பலரும் வீட்டை வாடகைக்கு விடுவதால் அதை சாதகமாக்கிக் கொண்டு குற்றவாளிகள் கேளம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு படையெடுப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். வீட்டிற்கு வாடகைக்கு வரும் புதிய நபர்கள் குறித்து போலீசாரிடம் தெரிவித்தால் மட்டுமே இதைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

* தனிப்படை போலீசார் விசாரணை
சென்னேரி வனப்பகுதியில் நடத்தப்பட்ட மது விருந்தில் கலந்து கொண்டதாக செங்கல்பட்டு நத்தம் பகுதியை சேர்ந்த அப்பாஸ், வினோத், ஆகாஷ், சஞ்சய் ஆகிய 4 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விருந்தில் கலந்துக்கொண்ட ரவுடிகள் யார் யார் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. யாரையாவது கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும், கேளம்பாக்கம் வீட்டில் இருந்த அசோக்குமாரின் மனைவியையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விசாரித்ததாகவும் தெரிகிறது. இருப்பினும் அவருக்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளதால் போலீசார் அழைக்கும் போது வரவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

Tags : Bomb blast ,Thiruporur ,house ,Kelambakkam ,Kalambakkam , Thiruporur, bomb blast, 2 injured, Kalambakkam house, 3 bombs
× RELATED திருப்போரூர் அருகே துப்பாக்கிகள்...