×

குழுவினர் முடிவெடுப்பதால் முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை: ஆர்.இளங்கோவன், மாநில கூட்டுறவு வங்கி தலைவர்

தமிழகத்தை பொறுத்தவரை மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள், அனைத்து தரப்பு விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெற வேண்டும் என்ற இலக்குடன் சென்று கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன், பொதுமக்களுக்கு சிறுவணிக கடன், மகளிர் தொழில் கடன் போன்றவை வழங்கப்படுகிறது. இதேபோல் தற்போது விவசாயிகளுக்கு தேவையான உரங்களும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் விவசாயிகளுக்கு கடன் வழங்க ஆண்டுக்கு ரூ.7,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதனை தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 ஆயிரம் கோடியாக உயர்த்தினார். நடப்பாண்டில் இந்த தொகை ரூ.11 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய கூட்டுறவு வங்கிகளிலும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளிலும் கடன் பெறுவதற்கும் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. நிலம் அடமானக் கடன் பெற சிட்டா, அடங்கலை சமர்ப்பிக்க வேண்டும். இப்படி கடன் கேட்டு ஒருவர், சமர்ப்பிக்கும் சிட்டா, அடங்கலை கூட்டுறவுத் துறை இ-சேவை மையத்தில் சரிபார்த்த பிறகே, கடன் வழங்குகிறோம். சம்பந்தப்பட்ட விஏஓ போலியான சிட்டா, அடங்கல் கொடுத்திருந்தால் உடனே கண்டுபிடிக்கப்பட்டு விடும். இதனால் போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெறுவது முற்றிலும் தவிர்க்கப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில் பிரதமரின் கிசான் திட்ட பயனாளிகள் வேளாண்மைத்துறை மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்கள் விவசாயிகள் என்பதை வேளாண் அதிகாரிகளே முடிவு செய்கின்றனர். அவர்களின் வங்கி கணக்குகள் பெரும்பாலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில்தான் உள்ளன. ஒரு சதவீத கணக்குகளே கூட்டுறவு வங்கிகளில் உள்ளன. கூட்டுறவு சங்கங்களில் அவர்கள் கணக்கு வைத்திருந்தாலும் வேளாண்மை துறை மூலமாகவே நிதி ஒதுக்கப்படுகிறது. அவர்களுக்கும், கூட்டுறவுத்துறைக்கும், அது சார்ந்த அதிகாரிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது சார்ந்த கணக்குகளை மத்திய தணிக்கை குழுவினரே கண்காணித்து வருகின்றனர்.

கிசான் திட்டப்பணிகள் அனைத்தும் அதிகாரிகள் மூலமே நிறைவேற்றப்படுகிறது. ஆனால் கூட்டுறவு வங்கிகளில் அதிகாரிகள் பணியாற்றினாலும் மக்கள் பிரதிநிதிகளை கொண்ட நிர்வாகக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிர்வாக குழுவே முக்கிய முடிவுகளை எடுக்கிறது. இது பலரது கருத்துகளின் அடிப்படையில் எடுக்கப்படும் வெளிப்படையான முடிவு என்பதால் முறைகேடுகளுக்கு அறவே வாய்ப்பில்லை. பிரதமரின் கிசான் திட்டம் என்பது விவசாயிகளுக்கான நிதியுதவி. ஆனால் கூட்டுறவு வங்கிகள் வழங்குவது அவர்களின் தேவைகளுக்கான கடன். இதில் எதிர்காலத்தில் எந்தவித முறைகேடுகளும் நடக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு நடைமுறைகளை கொண்டு வரவுள்ளோம்.  

குறிப்பாக அனைத்துவகை கடன்களையும் டிஜிட்டல் முறையில் வழங்க முடிவு செய்துள்ளோம். டெபிட் கார்டுகளை போல, விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் வழங்க உள்ளோம். அவர்களது கணக்கில் பணத்தை சேர்த்து விட்டால், எந்த ஏடிஎம்மில் இருந்தும் எடுத்துக் கொள்ளலாம். நடப்பாண்டு 13லட்சம் விவசாயிகளுக்கு கடன் அட்டை கொடுக்க இலக்கு நிர்ணயித்து, இதுவரை 11லட்சம் பேருக்கு கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. கிசான் திட்டப்பணிகள் அனைத்தும் அதிகாரிகள் மூலமே நிறைவேற்றப்படுகிறது. ஆனால் கூட்டுறவு வங்கிகளில் அதிகாரிகள் பணியாற்றினாலும் மக்கள் பிரதிநிதிகளை கொண்ட நிர்வாகக் குழுவே முக்கிய முடிவு எடுக்கிறது. இது வெளிப்படையான முடிவு என்பதால் முறைகேடுகளுக்கு அறவே வாய்ப்பில்லை.

* விவசாயிகளை காப்பாற்ற விவசாய கமிஷன் ஒன்றே ஒரே தீர்வு: நல்லசாமி, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர்
பிரதமரின் கிசான் திட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகளே முறைகேட்டில் ஈடுபட்டது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் ஏதும் முறையாக செல்லாததற்கு இதுபோன்ற அதிகாரிகளே காரணம். விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளவர்களுக்கு கிடைக்கக்கூடிய சொற்ப பணம் கூட ஊழல் நடவடிக்கைகள் மூலம் திருடப்பட்டு வருகிறது. இதேபோல், விவசாயிகளும் இடைக்கால தீர்வை நோக்கித்தான் போராடி வருகின்றனர். ஒரு நிரந்தர தீர்விற்காக யாரும் போராடுவது இல்லை. இதற்கு ஒரே நிரந்தர தீர்வு விவசாய கமிஷன் மட்டுமே. இந்த ஒரு இலக்கை அடைந்தால் மட்டுமே விவசாயிகள் நலம்பெற்று வாழ முடியும். விவசாய கமிஷன் அமைத்தாலே போதும் இதுபோன்ற ஊழல்களும், முறைகேடுகளும் நடைபெறாது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கழிவறை சுத்தம் செய்ய 17 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு 9 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் பாதிக்கு மேல் பட்டதாரிகள்தான். சம்பள கமிஷன் பரிந்துரை இருப்பதால்தான் இந்த வேலைக்கு செல்கிறார்கள். அதேபோல், விவசாயிகளும், விவசாயமும் செழிக்க வேண்டும் என்றால் அதற்கு விவசாய கமிஷனை நடைமுறைப்படுத்துவதே சிறந்தது. 2014 தேர்தலின் போது பிரதமர் மோடி விவசாய கமிஷனை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறினார். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர் இதை கண்டுகொள்ளவில்லை.

இதேபோல், விவசாயிகள் கூட மானியமும், கடன் தள்ளுபடி உள்ளிட்டவைகளுக்கு மட்டுமே போராடுகிறார்களே தவிர, விவசாய கமிஷன் கோரி போராட்டம் செய்வதில்லை. விவசாயிகள் சலுகைகள் கேட்டு போராடுவதால்தான் அதிகாரிகளும் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் பெரும்பாலும் 50க்கு 50 என்ற முறையிலேயே அதிகாரிகள் கமிஷன் பெற்று வழங்குகிறார்கள். விவசாயிகளை அரசே மதிப்பதில்லை. அப்படி இருக்கும் போது அதிகாரிகள் எப்படி மதிப்பார்கள்.

நாட்டில் 60 சதவீதம் விவசாயிகள் உள்ளனர். எனவே, விவசாயிகளை காப்பாற்ற விவசாய கமிஷன் ஒன்றே ஒரே தீர்வு. இல்லை என்றால், மத்திய அரசு எந்த ஒரு திட்டத்தை கொண்டுவந்தாலும் அது லஞ்சம், ஊழலுக்குதான் வழிவகுக்கும்.
தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையத்திற்கு ஒரு கிலோவிற்கு 1 ரூபாய் லஞ்சம் கொடுத்துதான் கொள்முதலுக்கு நெல் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. கிசான் திட்டத்தில் பிரதமர் வருடத்திற்கு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கிறார். ஆனால், இதற்கு அதிகாரிகள் போட்டிப்போட்டு முறைகேடு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.  

விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் மானியங்கள் கூட அரசு அதிகாரிகள் எடுத்துக்கொண்டது போக மீதத்தை பிச்சை போடுவது போல்தான் கொடுக்கிறார்கள். இது விவசாயிகளின் தன்மானத்திற்கும், சுயமரியாதைக்கும் விடுக்கப்படும் சவால். விவசாயிகள் திருவோடு ஏந்தித்தான் விவசாயத்தை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. நபார்டு திட்டங்கள் அனைத்தும் ஊழலை முன்னிலைப்படுத்தித்தான் தீட்டப்படுகிறது. அதிகாரிகள், ஆட்சியாளர்களும் தங்களுக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்பதை எதிர்பார்த்துதான் திட்டங்களை தீட்டுகிறார்கள். விவசாயிகள் நலனை முன்னிறுத்தி திட்டங்களை தீட்டுவது இல்லை. எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும் விவசாய கமிஷனை பரிந்துரை செய்ய வேண்டும். விவசாயிகள் கூட மானியமும், கடன் தள்ளுபடி உள்ளிட்டவைகளுக்கு போராடுகிறார்களே தவிர, விவசாய கமிஷன் கோரி போராட்டம் செய்வதில்லை. விவசாயிகள் சலுகைகள் கேட்டு போராடுவதால்தான் அதிகாரிகளும் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்.


Tags : committee ,State ,R. Ilangovan ,Co-operative Bank ,State Co-operative Bank , Committee Decision, Abuse, Opportunity: R. Ilangovan, Chairman, State Co-operative Bank
× RELATED தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம்