×

தமிழக அதிகாரிகள் விசாரிப்பது திருடன் கையில் சாவி கொடுப்பது போல: டி.ரவீந்திரன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் தமிழகத்தை பொறுத்தவரையில் பல்வேறு

தமிழகத்தை பொறுத்தவரையில் பல்வேறு திட்டங்களில் முறைகேடுகள் நடக்கிறது என எதிர்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டிக்கொண்டு வருகிறார்கள். இ-பாஸ் வழங்கியதில் கூட முறைகேடு நடைபெற்றது. தற்போது பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஊழலில் ஈடுபடுபவர்கள் மீது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே மற்றவர்களும் ஊழலில் ஈடுபடும் தைரியத்தை ஏற்படுத்துகிறது. கொரோனா காலத்திலும், பெரு நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படுவதைப் போல் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக கோரி வருகிறோம். அதை அரசு கண்டு கொள்ளவில்லை.

கொரோனா காலத்திலும்கூட விவசாயிகளுக்கு அவர்களுடைய கடனை தள்ளுபடி செய்யாமல் பெரு முதலாளிகள் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்வது நியாயமற்றது. இதுபோன்ற சூழலில் விவசாயிகளுக்கு கிடைக்கும் பிரதம மந்திரியின் கிசான் திட்டம் போன்ற திட்டங்களில் கூட ஊழல் நடைபெறுவது அதிர்ச்சியையே ஏற்படுத்துகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு பல ஆயிரம் கோடி தவறுதலாக சென்றிருக்கிறது. இதை முதலில் வெளியே கொண்டு
வந்தது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தான்.

இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கோரி கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தியுள்ளோம். இதையடுத்து, தமிழக அரசு ஊழலில் ஈடுபட்ட 14க்கும் மேற்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுகுறித்து விசாரிக்க சில அதிகாரிகளை நியமித்துள்ளனர். இது திருடன் கையிலேயே சாவியை கொடுப்பது போல் உள்ளது. உண்மையிலேயே எவ்வளவு முறைகேடு நடைபெற்றுள்ளது. யார் யாருக்கு பணம் சென்றது. பதிவு செய்த விவசாயிகளுக்கு பணம் சென்றதா என்பது குறித்து தற்போது நியமிக்கப்பட்டு விசாரணை அதிகாரிகளின் விசாரணையில் வெளிக்கொண்டுவர முடியாது.  

எனவே, உண்மை நிலைமையை கண்டறிய சிபிசிஐடி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட வேண்டும். இதில் எந்த அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளது என்பதை முழுமையாக கண்டறிய வேண்டும். இதேபோல், இந்த திட்டம் குறிப்பிட்ட விவசாயிகளுக்கு மட்டுமே கிடைக்காமல் குத்தகை விவசாயி, நடுத்தர விவசாயி உள்ளிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அரசின் பலன் சென்றடைய வேண்டும். இதற்காக தமிழகம் முழுவதும் 500 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான தயாரிப்பு பணிகள் நடக்கிறது.

பிரமரின் கிசான் திட்டம் போல் பல வேளாண் நலத்திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்படுகிறது. இதுபோன்று அறிவிக்கப்படும் திட்டங்களை ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அந்தந்த ஒன்றியத்தில் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். ஆனால், விவசாயிகளுக்கு என்ன நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது என உண்மையிலேயே தெரியவில்லை. இதனால், ஆளும் கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் திட்டத்தின் பலன் சென்றடையும் வகையில் தொடர்ச்சியாக முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். கிராமங்கள் தோறும் விவசாயிகளுக்கு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது கிடையாது. கடந்த 4 வருடமாக இதேபோல் தான் நடக்கிறது. பெரும்பாலான விவசாயிகளுக்கு எந்த நலத்திட்டங்களும் முறையாக சென்றடைவதில்லை. தமிழகம் முழுவதும் இதே நிலை தான் நீடிக்கிறது.

எந்த ஒரு நலத்திட்டமும் அனைவரையும் சரியாக சென்றடைய வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடும். குறிப்பாக பிரதமரின் கிசான் திட்டத்தில் சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த திட்டத்தில் எப்படி முறைகேடு நடந்தது உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டு தமிழகத்தில் அனைத்து விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் பலன் கிடைக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை ஆகும். உண்மையிலேயே எவ்வளவு முறைகேடு  நடைபெற்றுள்ளது. யார் யாருக்கு பணம் சென்றது. பதிவு செய்த விவசாயிகளுக்கு  பணம் சென்றதா என்பது குறித்து தற்போது நியமிக்கப்பட்டு விசாரணை  அதிகாரிகளின் விசாரணையில் வெளிக்கொண்டுவர முடியாது.

* ஊழலில் அதிகாரிகள், உள்ளூர் அரசியல்வாதிகள் கைகோர்ப்பு:  ஜெயச்சந்திரன், தலைமை கூட்டுறவு வங்கி அதிகாரிகள் அமைப்பின் இணை செயலாளர்
மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி விவசாயிகளுக்கோ பொதுமக்களுக்கோ கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தும் நல்ல திட்டங்களாகவே உள்ளது. ஆனால், இந்த திட்டங்கள் செல்லக்கூடிய வழிகளில் தான் பல்வேறு முறைகேடுகளும், ஊழல்களும் நடைபெறுகிறது. இதுபோல தான் இந்த கிசான் திட்டத்திலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மத்திய அரசு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் மானியம் கொடுக்கப்படுகிறது.

அரசு நிறைவேற்றும் திட்டங்களை செயல்படுத்தும்போது தான் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. கிசான் திட்டத்தில் விவசாயம் செய்யக்கூடியவர்களை தேர்வு செய்து வங்கி மூலமாக அவர்களுக்கு மானியம் கொடுக்க வேண்டும். இதுதான் இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகும். ஆனால், இதில் அப்படி நடைபெறவில்லை. விவசாயிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் இடத்தில் தான் பெரும் தவறு நடைபெற்றுள்ளது. விவசாயிகள் அல்லாதவர்களை இத்திட்டத்தில் இணைத்து முறைகேடுகளை செய்துள்ளனர். குறிப்பாக, வேளாண்துறை அதிகாரிகள் இம்முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.  

எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அந்த திட்டத்தில் அளிக்கப்படும் மானியங்கள் பெரும்பாலும் உரியவர்களுக்கு கிடைப்பது இல்லை. 80 சதவீதத்திற்கும் மேல் வேளாண் துறை அதிகாரிகள், உள்ளூர் அரசியல்வாதிகளின் தலையீடு உள்ளிட்டவைகளால் சம்பந்தம் இல்லாதவர்களுக்கே இந்த பணம் சென்றுள்ளது. இதுபோன்ற முறைகேடுகளால் விவசாயிகளுக்கான இதுபோன்ற நல்ல திட்டங்கள் வெற்றி அடைவதை விட்டு தோல்வியையே சந்திக்கிறது. இதனால், பணவீக்கமும் அடைந்து, மக்களின் வரிப்பணமும் தான் வீணாகும்.

எந்த ஒரு திட்டமும் விவசாயிகளுக்கு நேரடியாக சென்றடையும் பட்சத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரமும், நாட்டின் பொருளாதாரமும் முன்னேற்றம் அடையும். ஆனால், அதிகாரிகளின் ஊழல் முறைகேடுகள் மூலம் திட்டம் வீணடிக்கப்படுகிறது. எனவே, திட்டங்களை நெறிமுறைப்படுத்துவதே சிறந்தது. திட்டங்களை நெறிமுறைப்படுத்தினால் மட்டுமே உரியவர்களுக்கு திட்டங்களுக்கான பலன் சென்றடையும். இதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட வேண்டும்.
இதேபோல், எந்த ஒரு திட்டத்தையும் அரசு கொண்டுவரும் போதும் அந்த திட்டம் குறித்து குக்கிராமம் வரை, அடிப்படை விவசாயிக்கு அந்த திட்டம் குறித்து தெரியும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும். வேளாண் மற்றும் வங்கி அதிகாரிகள் மூலம் திட்டங்கள் குறித்த விவரங்களை நேரடியாக விவசாயிகளுக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

வங்கித்துறையிலும் சில இடர்பாடுகள் உள்ளன. விவசாயிகளுக்கு செல்லக்கூடிய பணம் அனைத்தும் வங்கிப்பணம் கிடையாது. அது அரசின் பணம். இதனால், திட்டத்தை விவசாயிகளுக்கு கொண்டுசெல்லும் போது வங்கிகளுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது. எனவே, வங்கிகளும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். சிறு, குறு விவசாயிகள் பயன் அடைவது தான் திட்டத்தின் ஒட்டுமொத்த குறிக்கோள். வேளாண்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட நபர் விவசாயி தான் என்று விவரங்களை வங்கிகளிடம் கொடுத்தாலும், அவர்கள் உண்மையாலும் விவசாயி தானா என்பதை வங்கிகளும் ஆராய்ந்து பின்னரே பணத்தை கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட நபர் விவசாயி இல்லை என்றால் பணத்தை திருப்பும் அனுப்பும் அதிகாரம் வங்கிகளுக்கு உள்ளது.

தவறுதலாக பெயர் சேர்க்கப்படுவது குறித்தும் முறையாக வேளான் துறையிடம் வங்கிகள் தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் சம்பந்தம் இல்லாத நபர்களுக்கு மானியம் செல்வதை வங்கிகளும் தவிர்க்க முடியும். இதன்மூலம் விவசாயிகளுக்கான திட்டங்களை வெற்றியடைய வைக்க முடியும். அனைத்து தரப்பினரும் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே திட்டங்களை முறையாக பெற முடியும். எந்த ஒரு திட்டமும் விவசாயிகளுக்கு நேரடியாக சென்றடையும் பட்சத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரமும், நாட்டின் பொருளாதாரமும் முன்னேற்றம் அடையும். ஆனால், அதிகாரிகளின் ஊழல் முறைகேடுகள் மூலம் திட்டம் வீணடிக்கப்படுகிறது.


Tags : investigation ,D. Raveendran ,Tamil Nadu ,Tamil Nadu Sugarcane Farmers' Association Tamil Nadu , Inquiry by Milaga officials is like giving a key in the hand of a thief: D. Raveendran, Tamil Nadu Sugarcane Farmers Association, General Secretary of State for Tamil Nadu
× RELATED குடோனில் பதுக்கப்பட்ட 4.38 லட்சம்...