×

கடன் தவணை சலுகை நீட்டிக்கப்படுமா?

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி அறிவித்த 6 மாத கடன் தவணை சலுகை இன்றுடன் முடிகிறது. இது மீண்டும் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 2 நாட்களில், பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டு சில நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதில், கொரோனாவால் வேலையிழப்பு, வருவாய் சரிவு போன்றவை ஏற்பட்டுள்ள நிலையில், கடன் தவணைகளை வங்கிகள் 3 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது. பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்த பரிந்துரை பொருந்தும்.

இந்த சலுகை மே 31 வரை முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 3 மாதங்களுக்கு நீட்டித்து ஆகஸட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை தனிநபர் கடன்கள், கல்விக் கடன்கள், வீட்டுக் கடன்கள், விவசாய கடன்கள், வாகன கடன்கள், வீட்டு உபயோக பொருட்களுக்கான கடன்கள் மற்றும் குறிப்பிட்ட கால அளவில் நிர்ணயிக்கப்பட்ட பிற கடன்கள் சிலவற்றுக்கும் இது பொருந்தும். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும், தொழிற்துறைகள், நிறுவனங்கள் இன்னும் முழு அளவில் இயங்கவில்லை. பலரின் வாழ்வாதாரம் பறிபோயுள்ளது. இந்நிலையில் இந்த தவணை சலுகை மீண்டும் நீட்டிக்கப்படுமா என தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ளனர். அதேநேரத்தில், சலுகையை நீட்டிக்கக்கூடாது என வங்கிகள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Will the loan installment, the offer, be extended? கடன் தவணை, சலுகை, நீட்டிக்கப்படுமா?
× RELATED ஏப்ரல் 1 ஆம் தேதி ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு