×

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 1,212 இந்தியர்கள் மீட்பு: ஏஜென்ட்கள் பண மோசடி அம்பலம்

சென்னை: அமெரிக்கா, அபுதாபி, குவைத், சார்ஜா, பக்ரைன், துபாய், ஓமன், கத்தார், ஜெட்டா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்களில் 1,212 பேர் மீட்கப்பட்டு அரசின் வந்தே பாரத் மீட்பு விமானங்கள் மற்றும் தனியார் மீட்பு விமானங்கள் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். இந்த 12 விமானங்களும் நேற்று முன்தினம் அதிகாலையில் இருந்து நேற்று அதிகாலை வரை சென்னை வந்து சேர்ந்தன. மீட்கப்பட்ட அனைவருக்கும் சென்னை விமான நிலையத்தில்   மருத்துவ பரிசோதனை, குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நடத்தப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இவர்களில் பக்ரைனிலிருந்து கல்ப் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த 164 இந்தியர்கள் தனியார் ஏஜென்ட்கள் மூலம் வந்ததால் அவர்களுக்கு விமான நிலையத்தில் இலவச மருத்துவ பரிசோதனை, அரசின் இலவச தனிமைப்படுத்தும் இடங்கள் கிடையாது என்று அதிகாரிகள் கூறினர். ஆனால் அவர்களிடம் ஏஜென்ட்கள் பக்ரைனிலேயே ஓட்டல் மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு பணம் வசூலித்து ஏமாற்றிவிட்டது தெரியவந்தது. இதனால் பயணிகள் ஆத்திரமடைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். ‘எங்களை ஏமாற்றிய ஏஜென்ட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை நாங்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லமாட்டோம்’ என்று போராட்டம் நடத்த தொடங்கினர்.

இதையடுத்து அதிகாரிகளும் போலீசாரும் பயணிகளை சமாதானம் செய்தனர். ஏஜென்ட்கள் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பின்பு அவர்களுக்கு விமான நிலையத்திலேயே இலவச மருத்துவ பரிசோதனைகள் நடத்தி 115 பேரை அரசின் இலவச தங்குமிடங்களுக்கும், 49 பேரை ஓட்டலுக்கும் அனுப்பி வைத்தனர். அதேபோல் அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த 93 இந்தியர்களில் சுமார்  40 பயணிகளின் லக்கேஜ்கள் வரவில்லை. டெல்லி விமான நிலையத்தில் தவறுதலாக இறக்கப்பட்டுவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த பயணிகள் ஏர்இந்தியா கவுன்டரை சூழ்ந்து வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து உடமைகளை நாளைக்குள் அவரவர் தனிமைப்படுத்துதலில் தங்கியுள்ள இடங்களுக்கே கொண்டு சென்று கொடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பின்பு பயணிகள் அமைதியானர்கள்.

Tags : Indians ,Agents , Overseas, Trapped, 1,212 Indians Recovered, Agents, Money Laundering Exposed
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...