×

தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா, போதை ஊசி, மாத்திரைகள் தாராளம்: பாழாகும் இளம் தலைமுறை

தாம்பரம்: தாம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சமீப காலமாக, இப்பகுதிகளில் கஞ்சா, போதை ஊசி, போதை மாத்திரைகள் புழக்கம் அதிகரித்து வருகி்றது. இவற்றுக்கு சிறுவர்கள், இளைஞர்கள் அதிகளவில் அடிமையாகி வருகின்றனர். தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சிறுவர்கள், இளைஞர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இவர்களை குறிவைத்து பலர் போதை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால், சிறுவர்கள் பலர் எளிதில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். குறிப்பாக, மேற்கு தாம்பரம், கடப்பேரி, புலிகொராடு ஆகிய மலைப்பகுதிகள், பர்மா காலனி, ராஜகோபால் நகர், 3வது தெருவில் அமைந்துள்ள நகராட்சி பூங்கா, மேற்கு தாம்பரம் வனத்துறை அலுவலகம் பின்புறம் உள்ள காடு, மேற்கு தாம்பரம், நேதாஜி முதல் தெரு பகுதியில் உள்ள காலியிடம் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் சிறுவர்கள், இளைஞர்கள் பலர் கஞ்சா புகைப்பது, போதை ஊசிகள், மாத்திரைகள் பயன்படுத்துவது, வாட்டர் கேனில் ஓட்டை போட்டு அதன் வழியாக சில போதை மருந்துகளை பயன்படுத்தி போதை ஏற்றிக் கொள்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

போதை தலைக்கேறிய பின்பு சாலைகளில் செல்லும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது, வாகனங்களில் அதிவேகமாக செல்வது, வழிப்பறியில் ஈடுபடுவது, பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இரும்பு பொருட்களை  உடைத்து எடுத்துக் கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் ஒருவரிடம் கேட்டபோது, தாம்பரம் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பழக்கம் அதிகரித்து வருவது உண்மைதான். இதனால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. எந்த போலீசாரும் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு ரோந்து பணிகளுக்கு செல்வதில்லை. அதுமட்டுமின்றி காவல் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறை உள்ளது. எனவே உயரதிகாரிகள் காவல் நிலையத்தில் கூடுதலாக போலீசாரை நியமித்து சமூக விரோத செயல்களுக்கு முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : circuit ,generation ,Tambaram , Copper, area, cannabis, injection, pills, generosity, waste, young generation
× RELATED ஊட்டி வருகை தரும் சுற்றுலா பயணிகள் வசதிக்கு சர்க்கியூட் பேருந்து சேவை