×

நாளை முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு

சென்னை: கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் வேளையில் தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு நாளை முதல் அமலாகிறது. இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுபாட்டில் 565 சுங்கச்சாவடிகள் உள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கால் சுங்கச்சாவடிகள் மூடப்பட்டிருந்தன. இருந்த போதிலும் இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 16ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் செப் 1ம் தேதி முதல், அதாவது நாளை முதல் கட்டணத்தை உயர்த்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது. அதன்படி நாளை முதல் சுங்கக்கட்டண உயர்வுக்கு அமலுக்கு வருகிறது. அதன்படி இதையடுத்து கொடைரோடு (திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்), பாளையம் (தர்மபுரி), விஜய மங்கலம்(குமாரபாளையம்), புதூர்பாண்டியாபுரம் (விருதுநகர்), எலியார்பதி (மதுரை),ராசம்பாளையம் (நாமக்கல்), ஒமலூர், சமயபுரம் (திருச்சி), வீரசோழபுரம் (சேலம்), மேட்டுபட்டி (சேலம்), வாழவந்தான் கோட்டை(தஞ்சாவூர்), நத்தக்கரை (சேலம்), மணவாசி (கரூர்), வைகுந்தம் (சேலம்) விக்கிரவாண்டி (விழுப்புரம்), திருப்பரைத்துறை (திருச்சி-கரூர்), பொன்னம்பலப்பட்டி (திருச்சி), திருமாந்துரை (விழுப்புரம்), செங்குறிச்சி (உளுந்தூர்பேட்டை), மொரட்டாண்டி (விழுப்புரம்) உட்பட 21 சுங்கசாவடிகளில் ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயருகிறது.

கட்டணம் உயர்வை அடுத்து 72 கி.மீ நீளம் கொண்ட விக்கிரவாண்டி (விழுப்புரம்) சுங்கச்சாவடிக்கு ஒரு தடவை கார், ஜீப், வேன் ஆகிய வாகனத்துக்கு ரூ.80, இலகு ரக வர்த்தக வாகனம், இலகுரக சரக்கு வாகனம், மினி பஸ்சுக்கு ரூ.145லிருந்து ரூ.150. லாரி, ஆம்னி பஸ் ரூ.285லிருந்து ரூ.290. 3 ஆக்ஸில் வர்த்தக வாகனம் ரூ.460லிருந்து ரூ.475. கனரக வாகனம் ரூ.460லிருந்து ரூ.475. பெரிதாக்கப்பட்ட வாகனம் ரூ.460லிருந்து ரூ.475 ஆகவும் கட்டணம் உயரும். கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த நேரத்தில் சுங்க கட்டண உயர்வு அவர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் என்று கட்டண உயர்வுக்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சுங்கக்கட்டணம் அதிகரித்தால் லாரி வாடகை அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Tags : Tariff hike ,motorists , From tomorrow, toll booths, fare hikes, motorists, protests
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...