×

முறைகேடுகளால் பலர் சஸ்பெண்ட் சங்கரன்கோவில் கோயிலுக்கு நிரந்தர அதிகாரி நியமிக்கப்படுவாரா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்திபெற்ற சங்கரநாராயண சுவாமி கோயிலில் கடந்த சில ஆண்டுகளாகவே நிர்வாக சீர்கேடு காரணமாக பல முறைகேடுகள் நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் கோமதி அம்மனுக்கு காணிக்கையாக வந்த பட்டுப்புடவைகளை திருடியதாக கோயில் ஊழியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் கோயிலில் உள்ள உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நகைகளை திருடியதாக கோயில் ஊழியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் கோயில் பொருட்கள் பாதுகாப்பு அறையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தீயை தீயணைப்புத் துறையினர் வந்து அணைத்தனர். பொருட்கள் பாதுகாப்பு அறையில் தீப்படித்தது தொடர்பாகவும் கோயில் ஊழியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் விலை மதிக்க முடியாத வெள்ளி பல்லக்கை கொள்ளையடித்தது தொடர்பாக கோயிலில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்த தூய்மைப் பணியாளர்கள் உட்பட 3 பேர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி. பொன் மாணிக்கவேலால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு நேரத்தில் முக்கிய ஆவணங்களை கோயில் ஊழியர் ஒருவரே தீ வைத்து எரித்தது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி இதில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டு உள்ளார்களா என்பதை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். 11ம் நூற்றாண்டில் உக்கிரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட சங்கரநாராயணசுவாமி கோயிலுக்கு விலைமதிக்க முடியாத நகைகளும், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும், ஏராளமான கட்டிடங்களும் உள்ளது.

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஊழியர்களே தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதால் கோயிலில் உள்ள நகைகள் மற்றும் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள், அவற்றின் ஆவணங்கள் தொடர்பாக உயர்நிலை விசாரணை நடத்தி சொத்துக்களை பாதுகாக்க தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கோயிலுக்கு நிரந்தர அதிகாரி நியமிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இவ்வாறு இக்கோயில் ஊழியர்களை பணியிடம் மாற்றம் செய்தால் இங்கு தொடர்ந்து நடந்துவரும் தில்லுமுல்லுகள் முடிவுக்கு வரும் என சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Many ,Sankarankoil ,officer ,Devotees , Abuses, Suspended, Sankarankoil Temple
× RELATED தண்ணீர் தேடி அலைந்தபோது குழியில்...